பாடுகளின் குருத்து ஞாயிறு : தன்னை இழக்கத் தூண்டும் தலைமைத்துவம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. எசா 50: 4-7 II. பிலி 2: 6-11 III. லூக் 22: 14 -23: 56)
தவக்காலத்தின் இறுதிக் கட்டமான புனித வாரத்திற்குள் நுழைகின்றோம். ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறு இன்று கொண்டாடப்படுகிறது. தவக்காலத்தின் உச்சநிலைக் காட்சிகள் இவ்வாரத்தில் அரங்கேறவிருக்கின்றன. இன்றைய நாளிலே, நமக்காகத் தன்னையே இழக்கத் தூண்டிய இயேசுவின் தலைமைத்துவம் குறித்துச் சிந்திப்போம். தேடி, சோறு நித்தம் தின்று, சின்னஞ் சிறுகதைகள் பேசி, வேடிக்கை மனிதராய் நாம் வெறுமனே மாண்டுபோகக் கூடாது. மாறாக, அர்ப்பண வாழ்க்கை வாழ வேண்டும். அர்ப்பண வாழ்க்கை வாழ்வதென்பது அவ்வளவு எளிதன்று; அது இமயத்தின் சிகரத்தை அடைவதைவிட மிகவும் கடினமானது. நமது சிறப்புமிக்கப் பேச்சால், எழுத்தால், பணிகளால், பாராட்டுக்களால் மட்டுமே அர்ப்பணமுடன் வாழ்ந்திட முடியாது. ஆனால், செயல்வழிச் சாதனைகளைச் செய்வதன் வழியாகத்தான் இதனை நாம் வாழ்ந்துகாட்ட முடியும். அந்தச் சாதனைகளும் கூடத் தனக்கானதாய் அமையாமல், சமுதாய மேம்பாட்டிற்கானதாய் அமைய வேண்டும். மானுடத்தை அரித்துத் தின்றழிக்கும் போர்கள், மோதல்கள், கலவரங்கள், புலம்பெயர்தல்கள், இடம்பெயர்தல்கள், சாதி, மத, இனக் கலவரங்கள், சமநிலையற்ற பொருளாதாரச் சீர்கேடுகள், மக்களை ஏய்த்துப் பிழைக்கும் அரசியல்வாதிகள், கொடிய நோய்கள், வறுமை, பட்டினி, இயற்கைப் பேரழிவுகள் போன்றவற்றிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் பணிகளுக்கான உண்மையானத் தலைமைத்துவமே அனைத்துலகளவில் இன்றையத் தேவையாக இருக்கின்றது. இத்தகையத் தலைமைத்துவம்தான் இயேசுவிடமும் காணப்பட்டது.
தலைமைத்துவத்தின் இலக்கணங்கள்
முதலாவதாக, ஒரு நல்ல தலைவர் அல்லது ஆயர் என்பவர் யார் என்ற கேள்விக்கு விடைதேடுவோம். இன முன்னேற்றத்தில் துடிப்பு, நடப்புப் பிரச்சனைகளில் அக்கறை, எதிர்கால தேசம் குறித்த பரந்த சிந்தனை, மக்களை ஒன்றிணைத்து திட்டமிடல், அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை உணர்ந்து செயல்படல் ஆகியவையே ஒரு தலைவனுக்குரிய இலக்கணங்களாக கே.ஏ.குணசேகரன் என்பவர் வரையறை செய்கிறார். “பணத்தை நேசிக்கும் தலைவர்கள் அல்ல, அன்பில் நீதியை வெளிப்படுத்தும் தலைவர்களே நமக்குத் தேவைப்படுகிறார்கள்; அன்பில் விளம்பரத்தைத் தேடும் தலைவர்கள் அல்ல, அன்பில் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் தலைவர்களே நமக்குத் தேவைப்படுகிறார்கள்” என்றார் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர். அமெரிக்காவில் 1963-ஆம் ஆண்டு லிங்கன் சதுக்கத்தில் ‘எனக்கொரு கனவுண்டு’ (I have a dream) என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய பேருரை, ஒட்டுமொத்த ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் இரத்தத்தில் புதியவேகத்தையும் நம்பிக்கையையும் பாய்ச்சியது. தனது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் கூட, அந்த ஆபத்தைத் தானாகத் தேடிச் சென்று துணிவுடன் மரணத்தைத் தழுவிக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவர் இவர் என்பது உலகறிந்த உண்மை. ஆபிரகாம் லிங்கனுக்குப் பிறகு அடிமைகளாக இருந்த ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவரின் விடிவெள்ளியாக, நம்பிக்கை நாயகனாகத் திகழ்ந்தவர் இவர். அந்த உரையில் இவரிடமிருந்து வெளிப்பட்டவையெல்லாம் வெறும் வார்த்தைகள் அல்ல, மாறாக, அடிமையினத்தை வேரோடுப் பிடுங்கி எறிய அவர் வீசிய ஏவுகணைகள் அவை. உறையும் குளிரில் இரத்தத்தைக் கொதிக்கவைத்த தீப்பிழம்புகள் அவை. ஆனால் அதேவேளையில், அமைதியையும் அகிம்சையையும் மட்டுமே வலியுறுத்தியவை என்பதை நம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. மேலும் இயேசுவின் வழியில் சமத்துவ சமுதாயம் படைக்க விரும்பும் யாவரும் அவரைப்போல வேள்வித் தீயில் தியாக மரணம் ஏற்க வேண்டும் என்பதையும் இவரது வாழ்வு நமக்கு நன்கு உணர்த்துகிறது. ஆம், இவர் 1968-ஆம் ஆண்டு, ஏப்ரல் 4 ஆம் நாள் டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் காந்தியடிகளின் வழியில் அகிம்சை வழியில் போராடியவர். இவர் கொல்லப்படுவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 1964-ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி, வன்முறையற்ற வகையில் நிறவெறிக்கெதிராகப் போராடியதற்காக இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
தலைமைத்துவத்தில் ஆன்மிக வலிமை அவசியம்
இப்போது அவர் ஆற்றிய உரையின் சில அற்புதமான கருத்துகளுக்குச் செவிமடுப்போம். "நூறாண்டுகள் கழிந்துவிட்டன. நீக்ரோ இன்னமும் விடுதலை பெறவில்லை. நூறாண்டுகள் கடந்துவிட்டன. நீக்ரோவின் வாழ்க்கை, இன்னமும் இன ஒதுக்கல் என்ற தீமையாலும் இனப்பாகுபாடு என்ற சங்கிலியாலும் மிக மோசமாக முடக்கப்பட்டுள்ளது. நூறாண்டுகள் கழிந்துவிட்டன. செழிப்பு என்ற ஒரு பெரிய கடலுக்கு நடுவே, வறுமை என்ற தனிமைத் தீவில் நீக்ரோ வாழ்ந்துகொண்டிருக்கிறான். நூறாண்டுகள் கழிந்தும் கூட, நீக்ரோ அமெரிக்க சமூகத்தின் ஒரு மூலையில் வதைபட்டுக்கொண்டிருக்கிறான். சொந்த மண்ணிலேயே அகதியாக உணர்கிறான். இந்த வெட்கக்கேடான நிலைமையை வெளிச்சம்போட்டுக் காட்டவே நாம் இங்கு ஒன்றுகூடியிருக்கிறோம். நீதிதேவனின் மாளிகை வாசலில் நின்றுகொண்டிருக்கும் என்னுடைய மக்களுக்கு நான் சில விடயங்களைச் சொல்லியாக வேண்டும். நமக்கான இடத்தைப் பெறுவதற்கான போராட்டத்தில், தீஞ்செயல்களைச் செய்யும் குற்றத்துக்கு நாம் ஆளாகிவிடக் கூடாது. வெறுப்பையும் கசப்புணர்வையும் குடித்து, நம் சுதந்தர தாகத்தைத் தணித்துக்கொள்ள முயற்சி செய்யக் கூடாது. கண்ணியமும் கட்டுப்பாட்டுடனுமான மேன்மையான பாதையில் நமது போராட்டம் தொடர வேண்டும். நமது நூதனமான எதிர்ப்பு, வன்முறையால் சீரழிந்துவிட நாம் அனுமதிக்கக் கூடாது. வன்முறையை எதிர்கொள்ள, மீண்டும் மீண்டும் ஆன்மிக வலிமையின் துணையை மட்டுமே நாம் நாட வேண்டும்.
கறுப்பின மக்களைப் பற்றியிருக்கும் இந்த அற்புதமான, புதிய போர்க்குணம், அனைத்து வெள்ளையர்களையும் நம் எதிரிகளாக நினைக்கும் நிலைக்குத் நம்மைத் தள்ளிவிடக் கூடாது. பல வெள்ளையினச் சகோதரர்களும், அவர்களது எதிர்காலம், பிரிக்கமுடியாத வகையில் நமது எதிர்காலத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை உணர்ந்துள்ளனர். இங்கே பெருந்திரளாக அவர்கள் கூடியிருப்பதே இதற்குச் சான்றாகும். நமது விடுதலையோடு, அவர்களது விடுதலையும் பிரிக்கமுடியாதபடி பின்னிப் பிணைந்திருக்கிறது என்ற புரிதல் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. நாம் மட்டும் தனியே நடைபோட முடியாது" எனத் தொடரும் அவரது உரை சில கனவுகளையும் முன்னிறுத்தி முற்றுப்பெறுகிறது.
துணிவும் பணிவும் தலைமைத்துவத்தின் அடையாளங்கள்
துணிவும் பணிவும் தலைமைத்துவம் என்னும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக ஒளிர்கின்றன. துணிவு இருந்து பணிவு இல்லாவிட்டாலும் அல்லது, பணிவு இருந்து துணிவு இல்லாவிட்டாலும் அந்தத் தலைமைத்துவம் தகர்ந்துபோய்விடும். இவ்விரண்டு நற்பண்புகளையும் இயேசு தனது தலைமைத்துவத்தில் கொண்டிருந்தார். இங்கே பணிவு என்பது அகிம்சையை அர்த்தப்படுத்துகிறது. இன்றைய முதல் வாசகமும் இதனைத்தான் நமக்கு எடுத்துகாட்டுகிறது. ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்; நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன் (எசா 50:5-7). மேலும் இன்றைய இரண்டாம் வாசகத்தில், “மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்” (பிலி 2:6-8) என்று இயேசுவின் தலைமைத்துவத்தில் வெளிப்பட்ட தாழ்ச்சியை எடுத்துக்காட்டுகிறார் புனித பவுலடியார்.
தோல்விகள்தாம் வெற்றியின் படிக்கட்டுக்கள்
இரண்டாவதாக, உயர்ந்த இலட்சியத்திற்காகப் போராடும் எந்தவொரு தலைவனும் இயேசுவைப்போல தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்கள், துன்பங்கள், துயரங்கள், வேதனைகள், பின்னடைவுகள், ஏளனப்பேச்சுக்கள், எள்ளிநகையாடல்கள் ஆகிய போராட்டச் சிலுவைகளைச் சுமக்கத்தான் வேண்டும். வலியோடு போராடினால்தான் ஒரு பெண் தாயாக முடியும், இருளோடு போராடினால்தான் புழு வண்ணத்துப்பூச்சியாக முடியும், மண்ணோடு போராடினால்தான் விதை விருட்சமாக முடியும், வாழ்க்கையோடு போராடினால்தான் வரலாறு படைக்க முடியும். ஆக, வாழ்க்கை என்ற போராட்டக் களத்தில் எல்லாத் தளங்களிலும் வெற்றிபெறும் வீரனே ஒரு சிறந்த தலைவனாகிறான். அதேவேளையில், ஆயுதம் ஏந்திப் போராடிய எந்தவொரு தலைவனும் இதுவரை வரலாறு படைக்கவில்லை, ஆனால் அகிம்சையை ஆயுதமாக ஏந்திப் போராடிய தலைவர்கள்தாம் இயேசுவைப்போல வெற்றியின் வரலாறாகிப் போயிருக்கிறார்கள். இயேசுவின் சிலுவை மரணம் என்பது தோல்வியில் முடிந்த ஒன்று என்றாலும், அவரது உயிர்ப்பு அந்தத் தோல்விக்கான வெற்றியாக அமைந்தது. இந்த உயிர்ப்பின் வெற்றிதான் இன்று அனைத்துலகளவில் அன்னையாம் திருஅவையை ஆழமாக வேரூன்றச் செய்திருக்கின்றது என்றால் அது மிகையாகது.
இந்திய / தமிகழச் சூழலில் தலைமைத்துவம்
இன்றைய நம் இந்தியாவில், அதிலும் குறிப்பாக நமது தமிழகத்தில் மூலைக்கு ஒரு தலைவன் என்று பலர் தோன்றி ஒன்றிணைந்து வாழும் தமிழக மக்களைக் கூறுபோட்டுக்கொண்டிருக்கின்றனர். ‘என் இனத்தின் விடுதலை வேந்தன் நானே’ என்று பொய்யாகக் குரலெழுப்பிக்கொண்டு பிரிவினைவாதங்களைத் தூண்டி, அதற்கு மக்களை பலிகடாக்களாக்கி வருகின்றனர். பொறுமையும், பொறுப்பும், நிதானமும், போதிய அரசியல் அனுபவமும் இன்றி, தங்களின் பிற்போக்குத்தனமான செயல்பாடுகளால் சமுதாயத்தில் பகைமையை விதைத்து வருகின்றனர். அறச்சினம் கொண்டு அகிம்சை வழியில் போராடாமல் ஆணவம் கொண்டு ஆபத்தான வழிகளில் போராடிவருகின்றனர். உணர்ச்சிவயப்பட்ட நிலையில், எல்லாவற்றையும் உடனே சாதிக்க வேண்டும் என்ற படபடப்போடு பணிகளாற்றித் தோல்விகள் அடைந்து வருகின்றனர். இந்த ஆண்டு கட்சித் தொடங்கி அடுத்த ஆண்டே தலைமைப் பொறுப்பை (முதலமைச்சர் பதவியை) கைப்பற்றிவிட வேண்டும் என்று பகல் கனவு கண்டு வருகின்றனர். ஆனால் மனப்பக்குவமற்றத் தலைமைத்துவம் படுதொல்வியில்தான் முடியும் என்பது வரலாறு சொல்லும் பாடம் என்பதை அவர்கள் உணர்ந்திடல் வேண்டும்.
Leadership is not a status; but it is a state என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதாவது, தலைமைத்துவம் என்பது அந்தஸ்து அல்ல, அது ஒருவகையான பொறுப்பு. அந்தஸ்து என்பது வெளி உலகு (புறம்) சம்மந்தப்பட்டது. இது அதிகாரம், பெயர், புகழ், வெற்றி, செல்வாக்கு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. ஆனால் பொறுப்பு என்பது உள்உலகு (அகம்) சம்மந்தப்பட்டது. இங்கே தலைமைத்துவம் என்பது வாழும் கலையைக் குறிக்கிறது. இது உணர்வு சம்பந்தப்பட்டது. இது வாழும் தன்மையால் வெளிப்படுகிறது. ஆக, உண்மையானத் தலைமைத்துவம் என்பது அரசாள்வது அல்ல, தன்னை அறிவது, தன்னை ஆள்வது, பிறருக்காகப் பணியாற்றுவது மற்றும் உயிரை இழப்பது. அதனால்தான், “தலைமை என்பது பதவியில் அமர்வதல்ல, பணியாற்றுவது” என்கிறார் டோனால்ட் மெக்கனான் என்ற அறிஞர். ஆக, தலைமைத்துவத்தை வெறும் அந்தஸ்தாக நினைத்து செயல்படும் தலைவர்கள் மட்டுமே தங்கள் பணிகளில் பெரும் தோல்விகளைச் சந்திக்கின்றனர். இதனை மனதில்கொண்டுதான் இயேசுவும், “உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” (மத் 20:26-28) என்று தம் சீடருக்குத் தெளிவுபடுத்துகின்றார்.
தன்னை இழக்கத் தூண்டும் தலைமைத்துவம்
இன்றைய நீண்ட நற்செய்தி வாசகத்தில், நாம் காணுகின்ற இயேசுவின் தூய்மைமிகு பாடுகளும், மரணமும் அவரைத் தரணிக்காய்த் தன்னை இழக்கத் தூண்டிய தலைமைத்துவத்தின் உயரியப் பண்புகளை உலகுக்குக் காட்டுகின்றன. “நல்ல ஆயர் நானே, நல்ல ஆயர் தன் ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுப்பார்” (யோவா 10:11) என்றும், “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்” (யோவா 12:24-25) என்றும், இயேசு மொழிந்த வார்த்தைகள் அவரது உண்மையானத் தலைமைத்துவத்திற்குச் சான்றாகத் திகழ்கின்றன. "உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம். மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா" என்று எழுதினார் கவிஞர் கண்ணதாசன். தன்னை அறிந்தவர்கள் தரணி ஆள்கிறார்கள், தன்னை அறியாதவர்கள் தரணியில் வீழ்கிறார்கள் என்பதைத்தான் இயேசுவின் தலைமைத்துவம் நமக்குச் சுருங்கச் சொல்கிறது. ஆகவே, குருத்து ஞாயிறன்று, நம் கைகளில் குருத்தோலைகளை ஏந்திக்கொண்டு ஓசன்னா கீதம் பாடுவதோடு நமது கிறிஸ்தவக் கடமை முடிந்துவிடவில்லை. மாறாக, இயேசுவின் வழியில் அவரது தலைமைத்துவப் பண்புகளை வாழ்வாக்கும்போதுதான் அது முற்றுப் பெறுகிறது என்பதை உணர்வோம். தன்னிகரற்றத் தலைவராம் இயேசு ஆண்டவர், அதற்கான அருளைப் பொழிய இந்நாளில் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்