எயிட்ஸ் குழந்தைகளின் கலங்கரை விளக்கமான சினேகதீப் பள்ளி
மெரினா ராஜ் - வத்திக்கான்
இந்தியாவின் பனஹாப்பாவில் இருக்கும் சினேகதீப் திருச்சிலுவை உறைவிடப் பள்ளியானது எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருக்கின்றது என்று வத்திக்கான் செய்திகளுக்குப் பகிர்ந்துள்ளார் அப்பள்ளியின் நிறுவனரான அருள்சகோதரி பிரிட்டோ மடஸ்ஸேரி.
கடவுளுடைய இரக்கமுள்ள அன்பினால் தூண்டப்பட்டு, காலத்தின் தேவைகளால் சவாலுக்கு உட்பட்டு, நமக்காக இறந்து உயிர்த்த இயேசுவின் மறைபொருளில் பங்கேற்பதன் வழியாக, நற்செய்தியை அறிவித்து வருகின்றோம் என்றும், தனிநபர்கள், குடும்பங்கள், மற்றும் பின்தங்கியவர்களுக்கான புதிய சமுதாயத்தை உருவாக்க பாடுபடுகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார் அருள்சகோதரி பிரிட்டோ மடஸ்ஸேரி.
திருச்சிலுவை சபையைச் சார்ந்தவரும் செவிலியருமான அருள்சகோதரி பிரிட்டோ 2014-ஆம் ஆண்டு சில சகோதரிகளுடன் இணைந்து எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதைக் கண்டு அவர்களுக்கான உறைவிடப்பள்ளி ஒன்றினை ஆரம்பித்தார்.
பொருளாதார நெருக்கடி, உடல்நலமின்மை போன்றவற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் பள்ளிக்குச்செல்ல இயலாமல் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதை அறிந்த அருள்சகோதரி அவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வாழ்வு உண்டு, அவர்களை நிராகரிக்கவும் கேள்விக்குட்படுத்தவும் நான் யார்? என்ற சிந்தனையுடன் தனது பணியினை செய்ய ஆரம்பித்ததாகப் பகிர்ந்துள்ளார்.
“நான் விடைபெறும் நேரம் வந்துவிட்டது, எனது பணியினை நீ முன்னெடுத்துச்செல்” என்ற தூய அன்னை தெரசாவின் வார்த்தைகளை மனதிலிருத்தி தனது வாழ்வை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக அர்ப்பணித்ததாக எடுத்துரைத்துள்ள சகோதரி பிரிட்டோ அவர்கள், நாம் கடவுளின் பணியினை ஆற்றும்போது அவர் நமது தேவைகளைப் பூர்த்தி செய்வார் என்றும் கூறியுள்ளார்.
2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது தன்னலமற்ற இப்பணிக்காக மறைப்பணி மற்றும் செயல்களின் நிலைத்த தன்மை என்பதற்கான விருதினை பெங்களூரு மருத்துவக்கல்லூரியின் 81-ஆவது ஆண்டு நிறைவுக்கூட்டத்தின்போது பெற்றார் சகோதரி பிரிட்டோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்