உக்ரைனில் இரஷ்ய தாக்குதல் குறித்து மதத் தலைவர்கள் கண்டனம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
உக்ரைனின் Sumy நகரில் 34 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான இரஷ்ய ஏவுகணை தாக்குதல் குறித்து தங்கள் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் மதத் தலைவர்கள்.
இரு குழந்தைகள் உட்பட 34 பேர் உயிழக்கவும், 119 பேர் காயமுறவும் காரணமான இரஷ்யாவின் குருத்து ஞாயிறின் தாக்குதல் குறித்து தன் கண்டனத்தை வெளியிட்ட உக்ரேனிய கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பேராயர் Sviatoslav Shevchuk அவர்கள், வாழ்வின் திருவிழாவை குருத்து ஞாயிறன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் மக்கள் மீது எதிரிகள் சாவின் விழாவைப் புகுத்தியுள்ளனர் என்றார்.
உக்ரைனின் வடகிழக்கே இரஷ்ய எல்லைக்கு 15 கிலோமீட்டருக்கு உள்ளேயிருக்கும் Sumy நகரில் ஏப்ரல் 13 ஞாயிறன்று இரு ஏவுகணைத் தாக்குதலை நடத்தி அப்பாவி மக்களைக் கொலைசெய்தது மனித குலத்திற்கு எதிரான பெரும் குற்றம் என்றார் பேராயர்.
ஏப்ரல் 12க்கும் 20க்கும் இடைப்பட்ட யூத திருவிழா கால விடுமுறையும், கிறிஸ்தவர்களின் புனித வார நிகழ்வுகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது இரஷ்யா இத்தாக்குதலை நடத்தியுள்ளது குறித்து உக்ரேனிய கிறிஸ்தவ சபைகளின் அவையும், மதத்தலைவர்களின் அமைப்பும் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
இம்மாதத் துவக்கத்தில் ஐ.நா. நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, பிப்ரவரியோடு ஒப்பிடும்போது மார்ச் மாதத்தில் உக்ரைனில் பொதுமக்களின் உயிரிழப்புக்கள் 50 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தெரிய வருகிறது.
இது கடந்த ஆண்டில் இதே காலத்தில் இடம்பெற்ற உயிரிழப்புகளைவிட 71 விழுக்காடு அதிகமாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்