இந்தியாவில் குருக்கள் தாக்கப்பட்டதற்கு அரசின் நடவடிக்கையில்லை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் இரு கத்தோலிக்கக் குருக்களும் சில பழங்குடிப் பெண்களும் தாக்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்த பின்னரும் காவல்துறையால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தலத்திருஅவைத் தலைவர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
Gajapati மாவட்டத்தின் Juba கிராமத்தில் மார்ச் 22ஆம் தேதி ஒரு பெண் காவல்துறை அதிகாரியின் கீழ் வந்த காவல்துறை குழுவால் அப்பங்கு அருள்பணியாளர் ஜோஷி ஜார்ஜ், உதவி பங்கு அருள்பணியாளர் தயானந்த் நாயக் ஆகியோரும், பங்கு கோவிலை சுத்தம் செய்து கொண்டிருந்த பழங்குடி பெண்கள் சிலரும் காரணமின்றி தாக்கப்பட்டது குறித்து புகாரளித்துள்ள போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஏப்ரல் 15 செவ்வாய்க்கிழமையன்று UCA செய்தி நிறுவனத்திடம் கூறினர் தலத்திருஅவை அதிகாரிகள்.
அவ்வூரில் இருந்த கிறிஸ்தவர்கள் மட்டுமே திட்டமிட்டு காவல்துறையால் தாக்கப்பட்டுள்ளதாகவும், கிராமத்தின் இந்துக்கள் எவரும் தாக்கப்படவில்லை எனவும் கூறினார் பங்குதள அருள்பணியாளர் ஜார்ஜ்.
அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருப்பதும், இந்த புகார் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுப்பதும், இது ஒரு திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பது தெளிவாகிறது என உரைத்த அருள்பணியாளர், கோவிலை சுத்தம் பண்ணிக் கொண்டிருந்த பழங்குடிப் பெண்களை காவல்துறையினர் தாக்கியதைத் தொடர்ந்து அவர்களைக் காப்பாற்றச் சென்ற இரு அருள்பணியாளர்களும் காவல்துறையால் தாக்கப்பட்டனர் எனவும் எடுத்துரைத்தார்.
2024ல் பி.ஜே.பி. ஆட்சி மத்தியில் மீண்டும் வந்ததிலிருந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்துள்ளதாக பல நிறுவனங்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்