தடம் தந்த தகைமை - நான் செய்ததுபோல நீங்களும்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்,
(யோவா 13:14&15) என தன் சீடர்களிடம் கூறினார் இயேசு.
பணிவிடைதான் கிறிஸ்தவத்தின் உயிர்மூச்சு. அதனைச் சொல்லினால் அன்றி, செய்முறையால் பாடமாக்கியவர் இயேசு. பாஸ்கா உணவில் பங்கேற்போரின் உடலும் உள்ளமும் சுத்தமாக இருத்தல் வேண்டும். பாதங்கள் நோக நடந்து வந்த சீடர்களுள் ஏற்கெனவே ‘தங்களுள் யார் பெரியவர்?’ என்ற கேள்வித் தீ கனன்று கொண்டிருந்தது. எனவே, இயேசு தாமே எழுந்தார். துணியை இடையில் கட்டினார். தண்ணீர்க் குவளையை எடுத்தார். எல்லாரின் காலடிகளையும் கழுவினார். அவரது தலைமைத்துவ பரிவன்பு துணிந்த பணிவிடையானது.
பணிவிலிருந்தே அறம் பிறக்கிறது. தம் சிலுவைப் பலியின் முகவுரையைக் காலடி கழுவுதலால் எழுதினார் இயேசு. அவரது பணிவிடை இன்று 1. அலங்காரக் கிறிஸ்தவமாக, 2. அதிகாரக் கிறிஸ்தவமாக, 3. அடையாளக் கிறிஸ்தவமாக, 4. அடிவருடும் கிறிஸ்தவமாக, 5. அல்லேலூயா கிறிஸ்தவமாக, 6. அலைபாயும் கிறிஸ்தவமாக, 7. அருள் விற்கும் கிறிஸ்தவமாகச் சிதைபட்டுக் கிடக்கிறது. எப்போது அது நம்மால் பணிவிடைக் கிறிஸ்தவமாக உருமாறும்? பணிவும் துணிவும் இறை நம்பிக்கையாளரின் சிறகுகள்.
இறைவா! பணிவிடை வாழ்வால் என்னை உம் சாட்சியாக்கும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்