தவக்காலம் மூன்றாம் ஞாயிறு : தனிமனித மனமாற்றமே தரணியை உயர்த்தும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. விப 3: 1-8a,13-15 II. 1 கொரி 10: 1-6,10-12 III. லூக் 13: 1-9)
தவக்காலத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். மனமாற்றம் என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு இன்றைய மூன்று வாசகங்களும் அதுகுறித்த சிந்தனைகளை நமக்கு வழங்குகின்றன. சிறப்பாக, தனிப்பட்ட ஒரு மனிதருடைய மனமாற்றம்தான் அவர் சார்ந்துள்ள ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் விடுதலை அளிக்கும் என்ற முக்கிய கருத்தையும் முன்வைக்கின்றது முதல் வாசகம்.
மனமாற்றம் என்பதன் பொருள்
நான் யார், நான் எங்கிருந்து வந்தவன், நான் எதை நோக்கிப் பயணிக்கின்றேன், நான் யாருக்காகப் பயணிக்கின்றேன், நான் பயணிக்கும் பாதை சரியானதுதானா என்பன போன்ற கேள்விகளை எழுப்பி, நம்மை சரியான பாதையில் நடத்திச்செல்வதுதான் உண்மையான மனமாற்றம் என்று மனமாற்றத்தை நாம் வரையறை செய்யலாம். நாம் வாழும் இந்தச் சமூகத்தில் சங்கிலித் தொடர்போன்று நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கின்றோம். ஒருவர் செய்யும் நற்காரியங்களின் பயன்கள் அவரைச் சார்ந்துள்ள அனைவருக்கும் கிடைப்பதுபோல, ஒருவர் செய்யும் தீமையும் அவரைச் சார்ந்துள்ள அனைவரையும் பாதிக்கும் என்பது திண்ணம். இருள்நிறைந்த வாழ்விலிருந்து ஒளிநிறைந்த வாழ்விற்கும், தீமையான வாழ்விலிருந்து நன்மையான வாழ்விற்கும், தன்னலத்திலிருந்து பிறர்நலத்திற்கும் கடந்து செல்வதை ‘மனமாற்றம்’ என்றும் நாம் அடையாளப்படுத்தலாம். மோசேயின் மனமாற்றம் இதற்கோர் எடுத்துக்காட்டாக அமைகின்றது. எகிப்திலிருந்து தப்பிவந்து மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்துக்கொண்டு தனது வாழ்வை நான்கு சுவற்றுக்குள் கழிக்க விரும்பினார். எதற்காக கடவுள் தன்னை இவ்வுலகிற்குக் கொண்டுவந்தார் என்பதை மறந்தவராகவும், குறிப்பாக, எகிப்தில் அடிமைத்தளையில் உழன்றுதவித்த தன் இனமக்களின் துயரங்களைக் கண்டுகொள்ளாதாவராகவும் வாழ்வதற்கு அவர் விரும்பினார். ஆனால் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் கடவுள் அவருக்குத் தோன்றி வாழ்வின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறார். சிறப்பாக, "எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன். இதோ! இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் என்னை எட்டியுள்ளது. மேலும் எகிப்தியர் அவர்களுக்கு இழைக்கும் கொடுமையையும் கண்டுள்ளேன். எனவே, இப்போதே போ; இஸ்ரயேல் இனத்தவராகிய என் மக்களை எகிப்திலிருந்து நடத்திச் செல்வதற்காக நான் உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன்" (வச 7,9-10) என்ற இறைத்தந்தையின் வார்த்தைகள் துன்புறும் மக்களுடன் இணைந்து துன்புறும் அவரின் இரக்கம்நிறை உள்ளதை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. அன்று மட்டுமல்ல, இன்றும் கூட உலகெங்கிலும் போர்களாலும், மோதல்களாலும், வன்முறைகளாலும் துயரும் மக்களின் துயர்நீக்கவும், அவர்களுக்கு விடுதலை வாழ்வை அளிக்கவும் இறைத்தந்தையின் குரல் நம்மை அழைக்கின்றது என்பதையும் நாம் இக்கணம் உணர வேண்டும். ஆக, பயத்திலிருந்தும், சுயநலத்திலிருந்தும், தன்னலநாட்டங்களிருந்தும் விடுபட்டு இறைத்தந்தையின் அழைப்பை ஏற்றுப் புறபட்ட மோசேயைப் போல நாமும் அவரின் அழைப்பை ஏற்கப் பணிக்கப்படுகிறோம். இதற்கு அடிப்படையாக அமைய வேண்டியது மனமாற்றம். இங்கே மனமாற்றம் என்பது பாவத்திலிருந்து விடுபட்டு கடவுளிடம் திரும்புவதை மட்டுமே குறிக்கவில்லை, மாறாக, தன்னல நாட்டங்களிலிருந்து விடுதலைப்பெற்று இறைவனின் அழைப்பை ஏற்பதை முதன்மைப்படுத்துகிறது என்பதையும் புரிந்துகொள்வோம்.
தனிமனித மாற்றமே சமூக மாற்றத்திற்கு வித்து
பொதுவாக, மனமாற்றம் என்பது தனிமனிதருடைய மாற்றத்தை மையப்படுத்தியதாகவே அமைகின்றது என்பதை நாம் கருத்தில் கொள்வது நல்லது. உரோமைப் பேரரசர் கான்ஸ்டன்டைனும் அவரது அன்னை ஹெலனாவும் பெற்ற மனமாற்றம்தான், கிறித்தவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வேதகலாபனைகளை முடிவுக்குக் கொண்டு வரவும், அதனை அரச மதமாக அறிவிக்கவும் வழிவகுத்தது. கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திக்கொண்டிருந்த சவுலின் மனமாற்றம்தான், இந்தத் திருஅவையின் வளர்ச்சிக்கான வித்தாக அமைந்தது. இயேசு சபையின் நிறுவுநர் புனித இலயோலா இஞ்ஞாசியாரின் மனமாற்றம்தான், கத்தோலிக்கத் திருஅவையை உடைக்க விரும்பிய கால்வின், மார்ட்டின் லூத்தர் ஆகியோரிடமிருந்து அதனைக் காப்பாற்றி மறுமலர்ச்சி அடையத் தூண்டியது. சிறப்பாக, இம்மாதம் 24-ஆம் தேதி எல்சால்வதோர் நாட்டின் பேராயர் புனித ஆஸ்கர் ரொமேரோவின் விழாவைக் கொண்டாடுகிறோம். இவர் பேராயரான தொடக்கத்தில், மற்ற ஆயர்களைப் போலவே தானும் ஒரு சராசரி மேய்ப்பராகத் தனது ஆயர் பதவியை அலங்கரித்துக்கொண்டார். ஆனால் அந்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுடன் மக்களாக வாழ்ந்து கொண்டிருந்த இயேசுசபை அருள்பணியாளார் ரொத்திலியோ கிராந்தே அவர்களின் கொடூர மரணத்தைப் பார்த்த பிறகுதான் மனமாற்றம் பெற்றார் பேராயர் ஆஸ்கர் ரோமெரோ. அதன்பிறகு அவரது வாழ்வின் போக்கே மாறியது. ஓர் உண்மையான ஆயர் பணிக்குரிய இலக்கணம் என்பது, அவர்தம் மக்களுடன் இணைந்து துன்புற்று அவர்களுக்காகத் தனது இன்னுயிரைக் கையளிப்பதுதான் என்பதைப் புரிந்துகொண்டு வாழ்ந்தார். அவர் கொல்லப்பட்ட பிறகும்கூட அந்நாட்டில் ஏறத்தாழ 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். எனினும், அவர் சிந்திய இரத்தம்தான் இன்று அந்நாட்டு மக்களுக்கு விடுதலை வாழ்வை அளித்துள்ளது. எகிப்தில் இஸ்ரேல் மக்கள் அடைந்த வேதனைகளும், இன்னல்களும், செய்திட்ட உயர்த்தியாகங்களும் எல்சால்வதோர் கிறிஸ்தவ மக்களுடன் முற்றிலும் ஒப்பிட்டு நோக்கத்தக்கவை.
இன்றைய உலகம் பயணிக்கும் பாதை
ஆனால், இன்றைய உலகம் மாற்றுப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. மண்ணாசையும், பொன்னாசையும், அதிகார மோகமும் இன்னும் மனிதரைவிட்டு அகன்றபாடில்லை. கடந்த கால உலக வரலாற்றை வாசிக்கும்போது, இரக்கமற்ற அரக்க மனம் கொண்ட பல தலைவர்கள் மனமாற்றம் பெறாததால் மனிதம் எப்படி சிதைக்கப்பட்டு வீழ்ந்துபோனது என்பதையும் அறிய வருகிறோம். நெப்போலியன், ஹிட்லர், முசோலினி, இடியமீன் போன்றோர் இதற்கு மாபெரும் எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றனர். இவர்களில் ஹிட்லர் என்பவர் மனித வரலாற்றில் என்றுமே அழிக்க முடியாத கறையாகப் படிந்துவிட்டார். இவர் மனித இனத்தின் தோலில் அமர்ந்துகொண்டு ஒரு தீய அசுரனாக வலம் வந்தார். 60 இலட்சம் யூதர்களை அழித்தது உட்பட, இதுவரைப் பதிவு செய்யப்படாத மனிதர்களுக்கு எதிரான மிகக் கொடூரமான குற்றங்களை/யும் அரங்கேற்றியவர் ஹிட்லர். அவர் நாடுகளை அழித்தொழிக்கத் திட்டமிட்டதுடன், மனித இனத்தின் பெரும்பகுதியை அடிமைகளாக மாற்றினார். அவர் தனது சொந்த மக்களை ஏமாற்றி, அவர்தான் ஜெர்மனியின் கடைசி நம்பிக்கை என்று அவர்களை நம்ப வைத்தார். உண்மையில், ஜெர்மனியின் பொருளாதார மற்றும் இராணுவ வலிமையை தனது தவறான கருத்தியல்களைப் பரப்புவதற்காகவே அவர் பயன்படுத்த விரும்பினார். அவர் ஜெர்மானியர்களை ஏமாற்றி மதியற்ற ஒரு கருத்தியலின் பெயரில் அவர்களின் நாட்டை நாசமாக்கினார். ஆனால் அதேவேளையில், மனித இனத்தைக் கொடூரமாக அழித்தவர்களும், தன்னை யாருமே வீழ்த்த முடியாது என்று இறுமாப்புடன் வீரவசனம் பேசியவர்களும் இறுதியில் வீழ்ந்து போனதாகத்தான் வரலாறும் பதிவு செய்திருக்கின்றது. இன்றைய இரண்டாம் வாசகத்தில், "தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர் விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளட்டும்" (1 கொரி 10:12) என்று மக்களை எச்சரிக்கின்றார் புனித பவுலடியார். மேலும் கடவுளின் இரக்கத்தையும் அவர் நிகழ்த்திய அருளடையாளங்களையும் கண்டும் கூட, மனமாற்றம் பெறாமல் தீயனவற்றில் ஆசைகொண்டதால் இஸ்ரயேல் மக்களில் பலர் எவ்வாறு பாலைநிலத்திலேயே கொல்லப்பட்டனர் என்பதையும் எடுத்துக்காட்டி நிலைவாழ்வு என்னும் நீரளிக்கும் பாறையாகிய கிறிஸ்துவின்மீது நம்பிக்கைக்கொண்டு வாழவும் நமக்கு அழைப்புவிடுகின்றார்.
மனமாற்றத்திற்கு அழைப்பு
இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு முக்கிமான பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதியில், பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியையும், சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேர் இறந்த நிகழ்வையும் எடுத்துக்காட்டி மனமாற்றம் பெற அழைப்புவிடுகின்றார் இயேசு. இன்றைய நம் உலகில், ஒருபுறம் சுனாமி, பெருவெள்ளம், பருவநிலை மாற்றம் போன்ற இயற்கைப் பேரிடர்களில் சிக்கி ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் இறக்கின்றனர். மறுபுறம், போர்கள், மோதல்கள், வன்முறைகள் போன்ற மனிதர்களால் நிகழ்த்தப்படும் செயற்கைப் பேரழிவுகளால் எண்ணற்ற அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். அப்படியென்றால், இவை இரண்டிலும் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பாவிகள் என்று நாம் கூறிவிட முடியுமா? இங்கே, இந்த இரண்டு நிகழ்வுகள் வழியாக, இயேசு என்ன கூறவிழைகிறார்? அதாவது, இவ்வுலக வாழ்வு என்பது நிலையற்றது என்பதையும், வாழ்வில் எந்நேரத்திலும் எதுவேண்டுமானாலும் நிகழலாம் என்பதையும் நமக்கு எடுத்துக்காட்டி, நாம் மனமாற்றம் பெற்று நல்லவர்காளாக வாழ்ந்திட நமக்கு அழைப்பு விடுகின்றார் இயேசு. இரண்டாவது பகுதியில், 'காய்க்காத அத்திமரம்' என்ற உவமை ஒன்றின் வழியாக மீண்டும் மனமாற்றத்தை வலியுறுத்துகின்றார். மனிதர் இறையச்சம் அற்றவர்களாக தீயவழியைத் தெரிந்துகொண்டு கனிகொடாத மரங்களாக வாழும்போது அவர்கள் மனமாற்றம் பெற்று நற்கனிதரும் மரங்களாக வாழ்வதற்கு கடவுள் மீண்டுமொரு வாய்ப்பை அவர்களுக்கு வழங்குகின்றார் என்பதை எடுத்துக்காட்டுகின்றார் இயேசு. ஆக, இதனை நன்கு புரிந்துகொண்டு மனிதர் தங்கள் வாழ்வை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் இவ்வுவமையின் பொருளாக அமைகிறது.
மனமாற்றத்திற்கான வாய்ப்புகள்
மனமாற்றத்திற்கான வாய்ப்புகள் என்பது நம் வாசல் கதவுகளை பலமுறை தட்டலாம் இந்த வாய்ப்புகள் பலர் வழியாக நமக்கு வரும். அவர்கள் நமது பெற்றோர்கள், ஆசிரியர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், மற்றும் நாம் திடீரென சந்திக்கும் சில மனிதர்களாகக் கூட இருக்கலாம். இவ்விடம் இரண்டு எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம். முதலாவது புனித அகுஸ்தினார். இவரது அன்னை புனித மோனிக்கா இவர் மனமாற்றத்திற்காக இடைவிடாது இறைவேண்டல் செய்துகொண்டிருந்தார். இதுமட்டுமன்றி, மனமாற்றம் பெறவேண்டி அவரிடம் நேரிடையாகவும் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்தார். இறுதியில் அவர் பெற்ற மனமாற்றம்தான் திருஅவைக்குப் பல்வேறு பலன்களைக் கொண்டுவந்தது. குறிப்பாக, தான் பெற்றிருந்த இறையாற்றலாலும் அறிவாற்றலாலும் அருமையான நூற்களைப் படைத்தளித்தார். திருஅவையில் புனித அகுஸ்தினார் இன்றும் ஒரு மைல் கல்லாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகாது. இரண்டாவது புனித பிரான்சிஸ் சவேரியார். புனித அகுஸ்தினாரைப் போன்று இவர் பாவ வாழ்வில் ஈடுபடவில்லை. மாறாக, அறிவு, ஆற்றல், செல்வாக்கு, தற்புகழ் போன்ற இவ்வுலகக் காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வந்தார். இயேசு சபையின் நிறுவுநர் புனித இனிகோ இவரைச் சந்தித்தபோதெல்லாம் "ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?" (காண்க. லூக் 9:25) என்ற இயேசுவின் வார்த்தைகளைக் கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் இவரது மனமாற்றம் உடனே நிகழ்ந்துவிடவில்லை, மாறாக, பல நாள்கள் ஆகின. புனித இனிகோ, இவரது உள்ளத்தில் அடிக்கடி இடியாய் இறங்கிய இயேசுவின் இந்த வார்த்தைகளால் இறுதியில் மனமாற்றம் பெற்றார் புனித சவேரியார். இந்தியாவிற்கு வந்த அவர் பம்பரமாய்ச் சுழன்று சுழன்று பணியாற்றி பத்தே ஆண்டுகளில் பல இலட்சம் ஆன்மாக்களை ஆண்டவரிடம் கொண்டுவந்தார். இன்று 500 ஆண்டுகளைக் கடந்தும் கோவாவில் இருக்கும் அவரது அழியாத புனித உடல் மனமாற்றம் மற்றும் நற்செய்தி அறிவிப்புக்குச் சான்றாகத் திகழ்கின்றது.
இந்த நிகழ்வு ஏற்கனவே நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்றாலும், இன்றைய நாள் மறையுரைச் சிந்தனைக்கு மிகவும் பொருத்தமுடையதாக இருப்பதால் இதனை மீண்டும் ஒருமுறை அறிந்துகொள்வோம். வகுப்பறையில் ஆசிரியர் மாணவர் ஒருவரை அழைத்து, இந்திய வரைபடத்தைப் பல பாகங்களாகக் கிழித்து அவன் கையில் கொடுத்து, “இதைச் சரியாகப் பொறுத்திக் கொண்டுவா” என்று கட்டளையிட்டார். இதனைப் பொருத்துவதற்கு அம்மாணவர் குறைந்தது ஒரு மணி நேரமாவது எடுத்துக்கொள்வார் என்று ஆசிரியர் எண்ணினார். ஆனால் அம்மாணவனோ, 10 நிமிடத்திற்குள் வரைபடத்தைச் சரிசெய்துகொண்டு வந்து விட்டான். “எப்படி இவ்வளவு சீக்கிரம் இந்த வரைபடத்தை உன்னால் சரிசெய்ய முடிந்தது” என்று அவனிடம் ஆசிரியர் வியப்புடன் கேட்டார். அதற்கு அம்மாணவன், “ஐயா, நீங்கள் கிழித்துக்கொடுத்த இந்திய வரைபடத்திற்குப் பின்புறம் ஒரு மனித உருவம் இருப்பதைக் கண்டுபிடித்தேன். ஆகவே முதலில் அம்மனித உருவத்தின் உடல் பாகங்களைச் சரியாகப் பொருத்தினேன். இந்திய வரைபடமும் சரியாகிவிட்டது” என்று கூறினான். ஆசிரியர் மிகவும் வியப்பில் ஆழ்ந்துவிட்டார். ஆக, ஒரு மனிதர் முதலில் தன்னை சரிசெய்துகொண்டாலே போதும், மற்ற எல்லாமே சரியாகிவிடும் என்ற எளிய பாடத்தை நம் மனதிற்குள் மிகவும் ஆழமாகப் புகுத்துகின்றது இந்நிகழ்வு. மேலும் ஒருவர் உண்மையிலேயே மனமாற்றம் பெறுகிறபோது, அவர் கடவுளின் அழைப்பை முழுமையாக ஏற்கிறார். இந்நிலையில், அவர் சுயநலம் என்னும் தனது குறுகிய வட்டத்தைக் கடந்து பொதுநலம் என்னும் பிறர்நல வட்டத்திற்குள் சென்று இந்தச் சமுதாயம் நலம்பெற தன்னை முழுதுமாக அர்பணிக்கிறார். இதுவே இறையாட்சியை அமைப்பதற்கான முதல்படியாக அமைகிறது. இதனை நன்கு உணர்ந்தவர்களாக நாமும் வாழ்ந்திடுவோம். இவ்வருளைப் பெற இந்நாளில் இயேசுவிடம் இறைஞ்சி மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்