தேடுதல்

Cookie Policy
The portal Vatican News uses technical or similar cookies to make navigation easier and guarantee the use of the services. Furthermore, technical and analysis cookies from third parties may be used. If you want to know more click here. By closing this banner you consent to the use of cookies.
I AGREE
Messa da Requiem, per soli, coro e orchestra
நிகழ்ச்சிகள் ஒலியோடை
மக்கள் திரளுக்குப்  படிப்பினைகள் வழங்கும் இயேசு மக்கள் திரளுக்குப் படிப்பினைகள் வழங்கும் இயேசு  

பொதுக் காலம் 7-ஆம் ஞாயிறு : மன்னிப்போம் மன்னிப்புப் பெறுவோம்!

தாவீதைப்போலவும், நமதாண்டவர் இயேசுவைப் போலவும், அருளாளர் இராணி மரியாவின் குடும்பத்தாரைப் பிறரை மனமுவந்து மன்னிக்கக் கற்றுக்கொள்வோம்.
பொதுக் காலம் 7-ஆம் ஞாயிறு : மன்னிப்போம் மன்னிப்புப் பெறுவோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம்  : வத்திக்கான்

(வாசகங்கள் I. 1 சாமு 26: 2, 7-9, 12-13, 22-23;  II. 1 கொரி 15: 45-49;  III. லூக் 6: 27-38)

இருபத்தேழு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு நாடு திருப்பிய விடுதலைப் போராளி நெல்சன் மண்டேலா அவர்கள், பொதுத்தேர்தலைச் சந்தித்து, 1994-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி, தனது 77-வது வயதில், தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பினத் தலைவரானார். நாட்டின் அரசுத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, செய்தியாளர் ஒருவர் அவரிடம் மிக முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பினார். “மண்டேலா அவர்களே, தற்போது ஆட்சி உங்கள் கைக்கு வந்துள்ளது (The ball is in your court). கறுப்பின மக்களை ஒடுக்கி, உங்களைச் சிறையில் தள்ளி கொடுமையாய் வதைத்த வெள்ளையர்களைப் பழிதீர்ப்பீர்களா” என்று கேட்டார். அதற்கு மண்டேலா, “அப்படிப்பட்ட பகைமையுணர்வு கொண்ட மனநிலை என்னிடம் இல்லை. நான் இப்போது விரும்புவதெல்லாம் கறுப்பின மக்களும் வெள்ளையின மக்களும் ஒன்றாகக் கரம்கோர்த்து உடன்பிறந்த உறவில் வாழ வேண்டும் வளர வேண்டும் என்பதுதான். இவ்வொன்றிப்பை வளர்க்கும் விதமாகவே நான் ஆட்சி  செய்ய விழைகிறேன்” என்று கூறினார். சொன்னதுபோலவே வாழ்ந்தும் காட்டினார் மண்டேலா.

நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலா

இன்று நாம் பொதுக்காலத்தின் ஏழாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய மூன்று வாசகங்களும் பகைமையைப் போக்கவும் மன்னிப்பை வளர்க்கவும் நம்மை அழைக்கின்றன. முதல் வாசகத்தில், தன்மீது பகைமை காட்டிய மன்னர் சவுலை மன்னித்து ஏற்கும் தாவீதின் உயர்ந்த மனதைப் பார்க்கிறோம். தாவீதின் வாழ்வே நாம் படிக்க வேண்டிய ஓர் உன்னதமான பாடமாக அமைகின்றது. உண்மையில் சவுல் தாவீதின் கரங்களிலிருந்து தப்பிப்பது இது இரண்டாவது முறை. முதல் முறை, தாவீதைக் கொல்ல வேண்டும் என்ற தீராத பகையுணர்வு கொண்டவராக, மூவாயிரம் பேருடன் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் தேடி வரையாடுகளின் பாறைகளுக்கு எதிர்ப்புறம் சென்றார் மன்னர் சவுல். அப்போது  அங்கிருந்த ஒரு குகைக்குள் இயற்கைக் கடன் கழிப்பதற்காக உள்ளே நுழைந்தார். அப்பொழுது தாவீதும் அவர்தம் ஆள்களும் அக்குகையின் உட்பகுதியில் இருந்தனர். தாவீதின் ஆள்கள் அவரிடம், “‘இதோ! உன் எதிரியை உன்னிடம் ஒப்புவிப்பேன். உன் விருப்பத்திற்கு ஏற்ப அவனுக்குச் செய்,’ என்று ஆண்டவர் சொன்ன நாள் இதுவே!” என்று கூறி சவுலை பழிவாங்குமாறு அவரது ஆள்கள் அவரை வற்புறுத்தியபோது, அவர் தம் ஆள்களைப் பார்த்து, “ஆண்டவர் திருப்பொழிவு செய்த என் தலைவருக்கு எத்தீங்கும் செய்யாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக. ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரானதால் நான் அவர் மேல் கைவைக்கக்கூடாது” என்று கூறினாரே தவிர அவர் சவுலுக்கு எத்தீங்கும் செய்யவில்லை. ஆனால் குகையைவிட்டு வெளியே வந்ததும் தாவீதின் வார்தைகளாலேயே இதை அறியும் சவுல் தன் தவறுக்காக மிகவும் மனம் வருந்தினார் (காண்க். 1 சாமுவேல் 24:4-5). ஆனாலும் தீய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மீண்டும் தாவீதைக் கொல்லத் தேடும் பகுதிதான் இன்று நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு எசிமோனுக்கு எதிரே உள்ள அக்கிலா குன்றில் இடம்பெறுகிறது. இதில் சவுல் தாவீதின் கரங்களில் இரண்டாம் முறையாக வசமாகச் சிக்கிக்கொள்கிறார். அப்போது உடனிருக்கும் அபிசாய் தாவீதிடம், “இந்நாளில் கடவுள் உம் எதிரியை உம்மிடம் ஒப்புவித்துள்ளார்; ஆதலால், இப்பொழுது நான் அவரை ஈட்டியால் இரண்டு முறை குத்தாமல், ஒரே குத்தாய் நிலத்தில் பதிய குத்தப்போகிறேன்” என்கிறான். ஆனால் முதல்முறை சொன்னதுபோலவே “அவரைக் கொல்லாதே! ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் கை வைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்?” என்று கூறித் தடுக்கிறார். தாவீதின் இந்தச் செயல் உண்மையிலேயே நம் அனைவரின் மனங்களையும் வருடுகின்றது. சந்தர்ப்பம் கிடைத்த உடனேயே, அதனைச் சாதகமாக்கிக்கொண்டு எதிரிகளைப் பழிதீர்க்க நினைக்கும் எத்தனையோ பேர் மத்தியில், தாவீது எவ்வளவு நல்மனதுடன் நடந்துகொள்கின்றார் பாருங்கள்! பகைவர்களையும் மன்னிக்கும் இந்த அழகிய குணம் தாவீது கடவுள்மீது கொண்டிருந்த பேரன்பினாலும் இறையச்சத்தினாலும் பிறக்கிறது என்பதைப் புரிந்துகொள்வோம். இதுமட்டுமன்றி, சவுல் தாவீதைக் கொல்லத்தேடிய வேளையில், பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிடத் தொடங்கினர். அப்போரில் தோல்வியைத் தழுவிய சவுல், தம் வாளை எடுத்து, தாமே அதன்மீது வீழ்ந்து மடிந்தார் (காண்க. 1 சாமு 31:4). சவுலின் இறப்பை தாவீது அறிந்தபோது, அவர் கொக்கரித்து குதூகலிக்கவில்லை, தனது பகைவனும் எதிரியுமான சவுல் ஒழிந்தான் என்று அவர் ஆடிப்பாடி ஆர்ப்பரிக்கவில்லை. மாறாக, துன்பத்தில் துவண்டு கண்ணீர் சிந்தி அழுகிறார். அவ்வேளையில், சவுலையும் அவருடைய மகன் யோனத்தானையும் குறித்து இரங்கற்பா ஒன்று இசைத்து ஆறுதல் தேடிக்கொள்கிறார் தாவீது  (காண்க. 2 சாமு 1:17-27).

உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், பல சாம்ராஜ்யங்கள் சரிந்துபோனதற்கு பகைமையுணர்வும் மன்னிக்க மறுத்த மனநிலையும்தான் முழுமுதற் காரணம் என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியும். இன்றும் கூட, உலகெங்கிலும் பகைமையின் காரணமாக ஏற்பட்டுள்ள மதவாதம், பிரிவினைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம், போன்றவை மனிதத்தை மாய்த்து வருகின்றன. இதிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி பிறரை மன்னித்து ஏற்பதுதான். மன்னிப்பது என்பது ஒரு மிகப்பெரும் ஆற்றல், மற்றும் தெய்வீகக் குணம். உண்மையைச் சொல்லவேண்டுமாயின், மன்னிப்பு என்பது மிகப்பெரிய வார்த்தையல்ல, ஆனால், அதைக் கேட்பதற்கும் கொடுப்பதற்கும் மிகப்பெரிய மனது தேவைப்படுகிறது. “தண்டனைக் கொடுப்பதற்குத் தாமதம் செய். ஆனால், மன்னிப்புக் கொடுப்பதற்கு யோசனைக் கூட செய்யாதே” என்றார் கொல்கத்தா நகரின் புனித அன்னை தெரசா. உண்மையாக மன்னிப்பது ஏழு படிநிலைகளைக் கொண்டுள்ளதாக Jon Negroni என்பவர் எடுத்துரைக்கின்றார். முதலாவது, தான் குறிப்பிட்ட ஒரு நபரால் காயம்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வது. இரண்டாவது, அந்தக் காயம் தன்னை எப்படிப் பாதித்துள்ளது என்பதை எண்ணிப்பார்ப்பது, மூன்றாவது, காயம் ஏற்படுத்தப்பட்டச் சூழலை மாற்ற இயலாது என்பதை ஏற்றுக்கொள்வது, நான்காவது, தன்னைக் காயப்படுத்திய நபரை மன்னிப்பதா வேண்டாமா என்று உறுதியாக முடிவெடுப்பது. ஐந்தாவது, காயத்தை ஏற்படுத்திய நபருக்கும் தனக்குமான உறவினை சரிசெய்து கொள்வது. ஆறாவது, தான் மன்னிக்கப்போகும் செயல், தன்னைவிட  சம்மந்தப்பட்ட நபருக்கு அதிகப் பயனளிக்கும்  என்பதைக் கற்றுக்கொள்வது. ஏழாவது, காயம் ஏற்படுத்திய அந்த நபரை முழுமனதுடன் மன்னிப்பது. இந்த ஏழு படிநிலைகளையும் தாவீது சவுலை மன்னித்து ஏற்கும் செயல்களில் காண்கின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஆண்டவர் பகைமையை நீக்கி மன்னிப்பில் வளர நம்மை அழைக்கிறார். “பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்" (வச. 31) என்ற இறைவார்த்தைதான் இன்றைய நற்செய்தியின் மையமாக, உயிர்நாடியாக அமைகின்றது. இதைத்தான் இயேசுவின் பொன்விதியாக (காண்க. மத் 7:12) மத்தேயு நற்செய்தியாளர் குறிப்பிடுகின்றார். ஆக, “எவ்வித குறையும் காணாது என்னிடம் எல்லாரும் அன்புகூர வேண்டும், எவ்வித எதிர்பார்ப்புமின்றி என்னை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும், நல்மனம்கொண்டு என்னை யாவரும் மன்னிக்க வேண்டும், என்னை எவரும் தவறாகத் தீர்ப்பிடக்கூடாது” என்றெல்லாம் யார் ஒருவர் கருதுகின்றாரோ அவர் முதலில் இவற்றை அடுத்தவருக்கு செய்ய வேண்டும் என்பதே இதன் உண்மைப் பொருளாக அமைகின்றது. மேலும் எவர் ஒருவர் பிறருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று நினைக்கின்றாரோ, அவரது உள்ளத்தில் முதலில் இரக்கம் பிறக்க வேண்டும். இரக்கம் இல்லாத மனங்களில் மன்னிப்புப் பிறக்காது, மன்னிப்புப் பிறக்காத மனங்களில் மனிதம் சிறக்காது, மனிதம் சிறக்காத சமுதாயத்தில் மாற்றம் நிகழாது. எனவேதான், தனது இறைத்தந்தையை எடுத்துக்காட்டி, "உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்"  (வச 36) என்று இரக்கத்தின் மேன்மை குறித்து நமக்குப் படிப்பிக்கின்றார் இயேசு. மேலும் "உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்" (வச. 27) என்றும், "நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்" (வச. 35) என்றும் இரண்டு முறை அவர் வலியுறுத்திக் கூறுவதிலிருந்து மன்னிப்பின் மகத்துவத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. உச்சகட்டமாக, “பகைவரை மன்னியுங்கள்” என்று சொன்னது மட்டுமன்றி, தான் சிலுவையில் தொங்கியபோது,  “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில், தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” (லூக் 23:34) என்று கூறி அதனைச் செயலளவிலும் வாழ்ந்து காட்டினார் இயேசு.

இயேசுவின் காலத்திற்குப் பிறகு இன்றுவரை, கிறிஸ்தவர்களாகிய நாம் அவரது வழியில் பகைமை உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், மன்னிப்பு என்ற உயர்ந்த இறையாட்சி விழுமியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதால்தான், கிறிஸ்தவம்  இன்றுவரை வீழ்ந்துவிடாமல் வானளாவ உயர்ந்து நிற்கிறது! ஆனால் அதை வீழ்த்த நினைத்தவர்கள்தாம் வீழ்ந்துபோயிருக்கிறார்கள். மேலும் மன்னித்தல் வழியாகப் பகைமையைப் போக்கும் இயேசுவின் வழி ஓர் அகிம்சை வழி. பகைமையைப் பகைமையால் விரட்டமுடியாது. அதனை மன்னிப்பு என்னும் அகிம்சையால்தான் விரட்ட முடியும் என்று தெளிவாக எடுத்துக்காட்டுகிறார். எனவேதான், இயேசு கைது செய்யப்படும் நிலையில், புனித பேதுரு உணர்ச்சிவயப்பட்டு மால்கூஸ் என்ற படைவீரரின் காதை வெட்டும்போது,  “உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்" (மத் 26:52) என்று எச்சரிக்கின்றனர். குறிப்பாக, இயேசுவின் அகிம்சை வழியை அண்ணல் காந்தியடிகள் நன்றாகாகப் புரிந்துகொண்டார். அதனால்தான், இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் இறுதிவரை அகிம்சை வழியில் நிலைத்து நின்று, அவரால் வெற்றிகாண முடிந்தது. ஆகவே நமது அன்றாட வாழ்வில் மன்னிப்பு என்ற வார்த்தையை வாயால் உச்சரிப்பதைவிட, அதை செயலளவில் வாழ்ந்து காட்டுவததில்தான் அதிகமான சவால்கள் நிறைந்திருக்கின்றன என்பதை நாம் நன்கு உணர்ந்துகொள்வோம்.

மகாத்மா காந்தியடிகள்
மகாத்மா காந்தியடிகள்

நம் தாய்த்திருஅவையில் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டிருக்கிற இந்திய அருள்சகோதரி இராணி மரியாவின் கொடூர மரணமும், அதனைத்தொடர்ந்து அவரது குடும்பத்தார் மேற்கொண்ட மன்னிப்பு முயற்சிகளும் நமக்கு அதனைக் குறித்த உயர்ந்த பாடங்களை நமக்குக் கற்றுத் தருகின்றன. 1995-ஆம் ஆண்டு மே மாதம், மத்தியப்பிரதேசத்திலுள்ள உதய் நகருக்குப் பணியாற்ற வந்தார்  சகோதரி இராணி மரியா. ஏழை எளிய மக்களுக்காகவும், குறிப்பாக, பெண்களின் மேம்பாட்டிற்காகவும் அவர் அயராது உழைத்தார். அதிலும் சிறப்பாக, அப்பகுதியிலுள்ள கந்துவட்டிக்கொடுமையை ஒழிக்கும் விதமாக அவர் அர்ப்பண மனதுடன் பணிபுரிந்து வந்தார். இதனால் கந்துவட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள் அனைவரும், பல்வேறு வழிகளில் அவருக்கு மிரட்டல்களும் எச்சரிக்கைகளும் விடுத்து வந்தனர். ஆனால், அவைகள் எதுவும் சகோதரி இராணி மரியாவை அசைக்க முடியவில்லை. துணிவுடன் தன் பணிகளைத்  தொடர்ந்தார் அவர். 1995-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதியன்று, கேரளா செல்வதற்காக ஒரு பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார் சகோதரி இராணி மரியா. அப்பேருந்தில் 50 பயணிகள் இருந்தனர். அவர்களோடு, சமந்தர் சிங் என்ற கொலைஞனும் அச்சகோதரியின் அருகில் அமர்ந்திருந்தான். பேருந்து காட்டுப் பாதையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சமந்தர் சிங், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை  எடுத்து சகோதரி இராணி மரியாவின் வயிற்றில் குத்தினான். உடனே பேருந்து நின்றதும், அனைவரும் அலறியடித்துக்கொண்டு ஓடிவிட்டனர். அதன் பிறகும் அவன் வெறி தீராதவனாய், இரத்தவெள்ளத்தில் துடிதுடித்துக்கொண்டிருந்த அச்சகோதரியை பேருந்திலிருந்து வெளியே இழுத்துப்போட்டு மீண்டும் பலமுறை கத்தியால் குத்திக் கொன்றான். சகோதரி இராணி மரியாவின் உடலில் 52 முறை கத்திக் குத்தப்பட்டிருந்ததாக உடற்கூறு ஆய்வு தெரிவித்தது. அதன்பிறகு, கைது செய்யப்பட்ட சமந்தர் சிங்கிற்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அப்போது, அதேசபையில் அருள்சகோதரியாகப் பணியாற்றிக்கொண்டிருந்த சகோதரி இராணி மரியாவின் தங்கை அருள்சகோதரி செல்மி பவுல் (Selmy Paul), சமந்தர் சிங்கை சிறையில் சென்று சந்தித்து அவருக்கு மன்னிப்பு அளித்து, விடுதலைப் பெற்றுத் தந்து, அவரை கேரளாவிலுள்ள தனது பெற்றோரிடம் அழைத்துச் சென்றார். அவர்களும் தன் அன்பு மகளைக் கொன்ற அந்தக் கொலைஞனை, இயேசுவின் வழியில் மன்னித்து தன் அன்பு மகனாக ஏற்றுக்கொண்டனர். மனமாற்றம் பெற்ற சம்மந்தர் சிங், தற்போது சகோதரி இராணி மரியாவின் கல்லறையில் அமர்ந்துகொண்டு அச்சகோதரியின் அர்ப்பண வாழ்விற்குச் சான்று பகர்ந்து வருகின்றார். அவர் புனிதராகும் நாளுக்காக அவர் ஆவலோடுக் காத்துக்கிடக்கின்றார். மன்னிப்பின் மகத்துவம் என்பது இதுதான். இது தீராத வலிநிறைந்த ஒன்றுதான் என்றாலும், இதுவே இறையாட்சிக்கான வழியென்பதை இயேசு நமக்குக் கற்றுத்தந்துள்ளார் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

தவறுவது மனித குணம், மன்னிப்பது தெய்வீகக் குணம் என்பார்கள். பலவீனமானவர்கள் பிறரை மன்னிக்கமாட்டார்கள். மன்னிப்பது என்பது மனவலிமையுடையோரின் குணம். மன்னிப்பது ஆன்மிக ரீதியாக மட்டுமல்ல, உளவியல் ரீதியாகவும் நமது வாழ்விற்கு நிறைவளிக்கிறது. மேலும், பரிணாம அறிவியலின்படி, பழிவாங்கும் நோக்கில் எழும் எண்ணங்கள், எப்படி நமது போக்கின் வேகத்தைக் கூட்டுகின்றதோ, அவ்வாறே, மன்னிப்பதற்கு முன்வரும் நமது மனதின் எண்ணங்களும் அதனின் வேகத்தைக் கூட்டுகின்றது. முக்கியமாக, மன்னிக்கும் உயர்ந்த செயலில் நாம் ஈடுபடும்போது, நலமான உறவுகள், மேம்பட்ட மனநலம், குறைவான பதட்டம், குறைவான மன அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், மனச்சோர்வின் குறைவான அறிகுறிகள், வலுவான நோயெதிர்ப்பு சக்தி, உயர்ந்த இதய நலன், மேம்படுத்தப்பட்ட சுயமரியாதை ஆகியவை ஏற்படுகின்றன. எனவேதான், மன்னிப்புப் பற்றிய தனது போதனைகளில், ஆன்மிக முதிர்ச்சியை மட்டுமல்லாமல் உளவியல் முதிர்ச்சியையும் முன்னிறுத்துகிறார் இயேசு. இதன் அடிப்படையில்தான் பகைவரிடம் அன்பு கூறவும், நம்மை வெறுப்போருக்கு நன்மை செய்யவும், சபிப்போருக்கு ஆசி கூறவும்; இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுதல் எழுப்பவும், அறிவுறுத்துகிறார். ஆகவே, மன்னிப்பதும் மன்னிப்புக் கேட்பதும், வாழ்க்கையில் நம்மை எவ்விதத்திலும் சிறுமைபடுத்தப் போவதில்லை என்பதை உணர்ந்திடுவோம். இன்னும் எஞ்சியிருப்பது எத்தனை ஆண்டுகள், மாதங்கள், வாரங்கள், நாட்கள், மணித்துளிகள் என்பது நமக்கே தெரியாது. எனவே, தாவீதைப்போலவும், நமதாண்டவர் இயேசுவைப் போலவும், அருளாளர் இராணி மரியாவின் குடும்பத்தாரைப் பிறரை மனமுவந்து மன்னிக்கக் கற்றுக்கொள்வோம். மன்னிப்போம் மன்னிப்புப் பெறுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 பிப்ரவரி 2025, 13:50
Prev
April 2025
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Next
May 2025
SuMoTuWeThFrSa
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031