பொதுக் காலம் 6-ஆம் ஞாயிறு : பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. எரே 17: 5-8; II. கொரி 15: 12,16-20; III. லூக் 6:17,20-26)
கடவுள் இந்த உலகைப் படைத்தபோது நன்மை தீமை இரண்டையும் படைத்தார். ஆனால் மனிதரை நல்லவர்களாகவே படைத்தார். தனது சாயலிலும் உருவிலும் படைக்கப்பட்ட மானிடர் எதைத் தேர்ந்துகொள்கின்றனர் என்பதை அவர் காண விரும்பினார். ஆனால் மானிடர் வாழ்வைத் தேர்ந்துகொள்ளாமால் சாவைத் தேர்ந்துகொண்டனர் (காண்க. தொநூ 3:1-7). படைப்பின் தொடக்கத்தில் நிகழ்ந்த மானிடரின் தவறான இந்தத் தேர்ந்துதெளிதல் இன்றும் தொடர்வதைப் பார்க்கின்றோம். உலகில் வாழும் மனிதர்களை, சுயநலவாதிகள் என்றும், பொதுநலவாதிகள் என்றும் இருவகையாகப் பிரிக்கலாம். சுயநலவாதிகளைக் கெட்டவர்கள் என்றும், பொதுநலவாதிகளை நல்லவரக்ள் என்றும் நாம் பொருள்கொள்ளலாம். நல்லவர்கள் நல்ல வினைகளைச் செய்பவர்கள். ஆனால் கெட்டவர்கள் கெட்ட வினைகளைச் செய்பவர்கள். இதனைத்தான், "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு" (குறள் 72) என்ற குறளில், 'அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணி மகிழ்ந்திடுவர்’ என்று உரைக்கின்றார் நமது வள்ளுவர் பெருந்தகை.
இன்று நாம் பொதுக் காலத்தின் ஆறாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் இருவகையான மனிதரை முன்வைக்கின்றன. மனிதரில் நம்பிக்கை வைப்போரும் வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக் காண்போரும் சபிக்கப்பட்டோர் என்றும், ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர் என்றும் வகைப்படுத்துகின்றது முதல் வாசகம். மேலும் ‘சபிக்கப்பட்டோர் பாலைநிலத்துப் புதர்ச்செடிக்கு ஒப்பாவர். பருவ காலத்திலும் அவர்கள் பயனடையார்; பாலை நிலத்தின் வறண்ட பகுதிகளிலும் யாரும் வாழா உவர் நிலத்திலுமே அவர்கள் குடியிருப்பர்' என்றும், பேறுபெற்றோரை, "அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட மரத்துக்கு ஒப்பாவர்; அது நீரோடையை நோக்கி வேர் விடுகின்றது. வெப்பமிகு நேரத்தில் அதற்கு அச்சமில்லை; அதன் இலைகள் பசுமையாய் இருக்கும்; வறட்சிமிகு ஆண்டிலும் அதற்குக் கவலை இராது; அது எப்போதும் கனி கொடுக்கும்" என்றும் கூறி இவ்விருவரின் வாழ்வியல் செயல்பாடுகளையும் எடுத்துக்காட்டுகின்றது. இரண்டாம் வாசகத்தில் இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்பாமல் இவ்வுலகக் காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களை முதல் வகையினராகவும், இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்பி அவருக்குச் சான்று பகர்ந்து வாழ்பவர்களை இரண்டாம் வகையினராகவும் எடுத்துக்காட்டுகின்றார் புனித பவுலடியார். இன்றையப் பதிலுரைப்பாடலிலும், பொல்லார் நல்லார் என மனிதரை இருவகையாகப் பிரித்து அவர்தம் பண்புகளைப் பட்டியலிடுகின்றார் தாவீது அரசர்.
நற்செய்தி வாசகத்தில் ஏழைகளையும், பட்டினியாய் கிடப்போரையும், அழுதுகொண்டிருப்போரையும் பேறுபெற்றோராகவும், இவர்களின் வாழ்வை சுரண்டிப் பிழைக்கும் பணக்கார வர்க்கத்தினரை சபிக்கப்பட்டோராகவும் எடுத்துக்காட்டுகிறார் இயேசு. நாம் காணும் இந்தப் பேறுபெற்றோர் குறித்த பகுதி ஒத்தமை நற்செய்தியாளர்களில் மத்தேயுவும் (மத் 5:1-12), லூக்காவும் (லூக் 6:17,20-26) மட்டுமே எடுத்துரைக்கின்றனர். அதேவேளையில், இவ்விருவரும் எடுத்துக்காட்டும் இயேசுவின் போதனையில் வேறுபாடுகள் இருப்பதையும் நாம் காண முடிக்கின்றது. அதாவது, இயேசுவின் இந்த உரை மலையில் நிகழ்வதாக மத்தேயுவும், சமவெளியில் இடம்பெறுவதாக லூக்காவும் குறிப்பிடுகின்றனர். 'இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார்' (வச 17) என்று லூக்கா குறிப்பிடுகின்றார். இங்கே 'சமவெளி' என்ற இந்த வார்த்தை தன்னில் 'சமத்துவம்' (equality) என்னும் உயரியப் பண்பைக் கொண்டுள்ளதைப் பார்க்கின்றோம். இன்றுபோல் இயேசுவின் காலத்து யூதச் சமுதாயத்திலும் பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் ஆகிய மூன்று பிரிவினர் வாழ்ந்தனர். அவர்கள் உரோமை ஆட்சியாளர்களின் பிரதிநிதிகள், ஏரோதின் அரசக் குடும்பத்தினர், மற்றும் எருசலேம் கோவிலை நிர்வாகம் செய்த சதுசேயர்கள் ஆவர். யூதத் தலைமைச் சங்கத்தைச் சேர்ந்த நில பிரபுக்கள் போன்றோர் பணக்கார வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் எருசலேம் நகரில்தான் வாழ்ந்தனர். பெரும்பாலான பரிசேயர்கள் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவரகள். இவர்கள் எருசலேம் நகரிலும், இன்னும் பிற சிறிய நகர்களிலும், கிராமங்களிலும் வாழ்ந்தனர். இவர்கள் நீதிமன்ற நடுவர்களாகவும், எழுத்தர்களாகவும் பணியாற்றினர். மூன்றாவது பிரிவினர், ஏழை எளிய மக்கள். இவர்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையோராக இருந்தனர்.
முதல் நூற்றாண்டு யூதச் சமூகத்தில் ஏழைகள் என்ற சொல் வறியோர், பாவிகள், நோயாளர்கள், தீய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டோர், கல்வி அறிவில்லா பாமர மக்கள், ஒழுக்கமற்ற தொழில் செய்தோர் (விலைமகளிர்) ஆகிய அனைவரையும் குறித்தது. இதன் காரணமாகவே, ‘பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். அவர் சொல்வதைக் கேட்கவும் தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள். அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்’ (வச 17-19) என்று இயேசுவைத் தேடிவந்த மக்கள் எத்தகையோர் என்பதைப் பதிவுசெய்கின்றார் லூக்கா. மேலும் யூதச் சமுத்தாயத்திற்கு வெளியில் நிலவிய அநீதிகளைவிட, உள்ளே நிலவிய அநீதிகள்தாம் மிகவும் கொடியதாக இருந்தன. ஆக, ஒடுக்குமுறைககளாலும் பொருளாதாரச் சுரண்டல்களாலும் யூதச் சமுதாயம் மிகவும் பாழ்பட்டுப் போயிருந்ததை இயேசு நன்றாகவே அறிந்திருந்தார். அதேவேளையில், உரோமையரின் ஆட்சியைக் கடுமையாக எதிர்த்த நடுத்தர வர்க்க யூதர்கள், தங்களிலும் கீழ்நிலையில் இருந்த ஏழை எளியவரையும் பாமர மக்களையும் பல்வேறு பொருளாதார அடக்குமுறைகள் மூலம் கசக்கிப் பிழிந்தனர். இவ்விதத்தில், உரோமையரின் ஆதிக்கத்தின் காரணமாக மக்கள் அனுபவித்த துயரங்களையும் வேதனைகளையும்விட மறைநூல் அறிஞர்கள், சதுசேயர்கள் மற்றும் பரிசேயர்களால் அனுபவித்த துயரங்கள்தாம் மிகவும் அதிகம். இதனையெல்லாம், இயேசு நேரில் கண்ணுற்றதினால்தான், “ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில், இறையாட்சி உங்களுக்கு உரியதே" (வச 20) என்று தொடக்கத்திலேயே கனிவுடன் கூறுகின்றார். இங்கே ஒரு முக்கியமான கருத்தையும் நம் உள்ளத்தில் கொள்ள வேண்டும். அதாவது, பாலஸ்தீன சமூக அமைப்பில் இயேசு ஏழை வர்க்கத்தைச் சேர்ந்தவர் அல்ல. மாறாக, அவர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர். வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள், மருத்துவம், மீன்பிடித்தல், தச்சு ஆகிய தொழிலைச் செய்தவர்கள் யாவரும் மதிக்கப்பட்ட நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இவ்விதத்தில் பார்க்கும்போது, இயேசு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எல்லாவிதத்திலும் ஒடுக்கப்பட்டு ஏழையராக வாழ்ந்தவர்களுக்காகக் குரல் எழுப்புகிறார், சமுதாயத்தில் அவர்களை முதன்மைப்படுத்துகிறார், அவர்களுடன் உரையாடுகிறார், உறவாடுகிறார், மற்றும் சமமாக மேசையில் அமர்ந்து உண்கிறார். மேலும் தொழுகைக்கூடத்தில் எசாயாவின் ஏட்டுச் சுருளிலிருந்து வாசிக்கும் இயேசு, தனது கொள்கை அறிக்கையாக ஐந்து காரியங்களைச் சுட்டிக்காட்டுகின்றார். இந்த ஐந்திலும், கடவுள் ஏழைகளை அன்புகூர்கிறார், தனது இறையாட்சியில் அவர்களுக்கு முன்னுரிமைக் கொடுக்கின்றார், மற்றும் தான் அளிக்கும் இறையாட்சி விருந்திற்கு அவர்களுக்கு மட்டுமே அழைப்புவிடுக்கின்றார் என்பதை தெளிவுபடக் கூறுகிறார். இயேசு (காண்க. லூக் 4:16-19). மேலும் ஏழைகள் சார்பாக அவர் நிலைப்பாடு எடுப்பதன் காரணமாக, “பெருந்தீனிக்காரன், குடிகாரன், பாவிகளுக்கும் வரிதண்டுபவர்களும் நண்பன்” (காண்க. மத் 11:19, லூக் 7:34) என்ற பழிச்சொற்களை ஏற்கும் அளவிற்கு அவர் ஏழையருடன் ஓர் ஏழையாக வாழ்ந்தார் என்பதையும் நாம் அறிகின்றோம்.
இன்றைய நற்செய்தியில், இப்போது பட்டினியாய் இருக்கும் ஏழைகள் நிறைவு பெறுவர் என்றும், அழுதுகொண்டிருக்கும் அவர்கள் புன்னகைத்து மகிழ்வார்கள் என்றும் கூறும் இயேசு, இறையாட்சி இவர்களுக்கு மட்டுமே உரியது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார். அதேவேளையில், இப்போது உண்டுகொழுக்கும் பணக்காரர்கள், பின்னாளில் பட்டினிக்கிடப்பார்கள் என்றும், இப்போது கொக்கரித்து குதூகலிக்கும் அவர்கள் பின்னர் துயருற்று அழுவார்கள் என்றும் கூறும் இயேசு, அவர்கள் இறையாட்சிக்குப் புறம்பே தள்ளப்படுவார்கள் என்றும் எச்சரிக்கின்றார். இதன் பின்னணியில், நமது இந்தியாவின் பொருளாதார நிலையைக் காணும்போது, அது நமது மனங்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்குகிறது. 2015-ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் வளங்கள் பணக்காரர்கள் வசம் சென்றுகொண்டிருப்பதாகவும், ஏழை-பணக்காரர் இடைவெளி மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருவதாகவும் கூறும் Oxfam ஆய்வறிக்கை, 2021-ஆம் ஆண்டில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகியுள்ளதாகவும், ஏழைகள் மேலும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது. இந்தியாவின் வரிவிதிப்புக் கொள்கைகள் பணம் படைத்தவர்களுக்கே சாதகமாக இருப்பதாகவும், 2021-ஆம் ஆண்டில் இந்தியாவில் பெரும்பணக்காரர்களின் சொத்து 39 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், ஏழைகளின் ஆண்டு வருமானம் 53 விழுக்காடு குறைந்துள்ளதாகவும் தன் ஆய்வறிக்கையில் கவலையை வெளியிட்டது. இதுமட்டுமன்றி, இந்தியாவில் 98 பெரும்பணக்காரர்கள் வைத்திருக்கும் சொத்து மதிப்பு, அடிமட்டத்தில் இருக்கும் 55 கோடியே 50 இலட்சம் மக்கள் கொண்டிருக்கும் சொத்து மதிப்பிற்கு ஈடாக இருப்பதாகவும் உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் 2020-ஆம் ஆண்டில், இந்தியாவில் 102 ஆக இருந்த பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை, 2021-ஆம் ஆண்டில் 142 ஆக உயர்ந்துள்ளது என்றும், உலகில் அதிக எண்ணிக்கையில் பெரும்பணக்காரர்களைக் கொண்டுள்ள நாடுகளுள், சீனா மற்றும், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அடுத்து இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘survival of the fittest’ என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதாவது, 'தகுதியானவர்களே தாக்குப்பிடிக்க முடியும்' என்பதுதான் இதன் அர்த்தம். அப்படியென்றால், இங்கே ஆள்பலத்தையும், பண பலத்தையும், அதிகார பலத்தையும் தன்வசம் கொண்டோர் மட்டுமே பிழைத்துக்கொள்ள முடியும். ஆனால் பணமில்லா, பலமில்லா, அதிகாரமில்லா ஏழைகள் அப்படியே மடிந்துபோகவேண்டியதுதான்.
ஒருமுறை சீக்கிய மதத்தின் தலைவர் குருநானக் ஒரு கிராமத்திற்குச் சென்றார். அப்போது அந்தக் கிராமத்தின் நுழைவு வாயிலில் அவ்வூரிலுள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு வந்து மேளதாளம் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவ்வூரிலிருந்த மிகப்பெரிய பணக்காரர் இதனை தன் வீட்டு மாடியிலிருந்து கவனித்தார். ‘யார் அந்த மனிதர்? இவ்வளவு மதிப்பும் மரியாதையும் பெறுகிறாரே! இவர் நம்மைவிட பெரிய பணக்காரராகவா இருக்கப்போகிறார்!’ என்று எண்ணியவாறு அவரைச் சந்திக்க வழிதேடினார். சில மணி நேரங்கள் கழித்து அவரைச் சந்தித்த அவர். “சாமி, இந்த ஊரிலேயே நான்தான் பெரிய பணக்காரர். இவங்க எல்லாம் என் பண்ணையில வேலை செய்யுறவங்க. என் வீட்டிற்கு வாங்க, உங்களுக்கு நல்ல உபசரிப்பு கொடுக்கிறேன்” என்று கூறி அவரை அழைத்தார். குருநானக்கும் அவரிடம் வருவதாகக் கூறினார். அடுத்த நாள் அப்பணக்காரரின் வீட்டிற்கு வந்தார் குருநானக். அவரை வாசலில் வரவேற்ற அப்பணக்காரர், தன் மாளிகை முழுவதையும் சுற்றிக்காட்டினார். அப்போது தன்னைப் பற்றியும் தன் மூதாதையரைப் பற்றியும் தம்பட்டம் அடித்துக்கொண்டார். அவரை மாடியின் மேல்தளத்திற்கு அழைத்துச்சென்று அந்தக் கிராமத்தைக் காட்டி அந்த ஊரிலுள்ள எல்லா சொத்துக்களும் தனக்கு மட்டுமே சொந்தமானதாகக் காட்டிக்கொண்டார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த குருநானக் அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பினார்.
தொடர்ந்து விதவிதமான விருந்துகளை அவருக்குப் படைக்க விரும்பினார் அப்பணக்காரர். ஆனால், அவற்றையெல்லாம் குருநானக் விரும்பவில்லை. வீட்டைவிட்டுக் கிளம்பும் வேளையில் அந்தப் பணக்காரரிடம், “எனக்கு ஒர் உதவி செய்வீர்களா” என்று கேட்டார் குருநானக். அதற்கு அவர், “சொல்லுங்கள் சாமி, உடனே செய்கிறேன்” என்றார். அப்போது தன் பையிலிருந்து ஒரு குண்டூசியை எடுத்து அப்பணக்காரரின் கையில் கொடுத்து, “சொர்க்கத்தில் என்னைச் சந்திக்கும்போது இதைப் பத்திரமாக என்னிடம் கொடுக்க முடியுமா” என்று கேட்டார். உடனே கோபமடைந்த அந்தப் பணக்காரர், “என்ன சாமி என்னைக் கேலி பண்ணுறீங்களா” என்று கேட்டார். “இல்லையப்பா உண்மையாகத்தான் சொல்கிறேன்” என்றார். அதற்கு அந்தப் பணக்காரர், “சாமி இந்த உலகத்தைவிட்டுப் போகும்போது யாரும் ஒரு குண்டூசியைக் கூட கொண்டுபோக முடியாது. அப்படியிருக்க, நான் மட்டும் எப்படி சாமி இந்தக் குண்டூசியை சொர்க்கத்துல கொண்டுவந்து உங்கக்கிட்ட கொடுக்க முடியும்” என்று கேட்டார். உடனே குருநானக், “இறந்த பிறகு இங்கிருந்து எதையுமே மேல கொண்டுபோக முடியாதுன்னு தெரிஞ்ச உனக்கு, சொத்துமேல ஏனப்பா இவ்வளவு பேராசை? நீ அபகரித்து வைத்திருக்கிற சொத்துக்கள் எல்லாவற்றையும் அந்த ஏழை மக்களிடமே திரும்பக் கொடுத்துவிடு” என்று கூறினார்.
பேராசைக் கொண்ட மனிதனுக்கு இவ்வுலகத்தையே கொடுத்தாலும் அவன் திருப்தியடைய மாட்டான் என்று சொல்லுவார்கள். ஆம், செல்வத்தின்மீதான சிலரின் பேராசையே பலரை ஏழையராக்கி வருகின்றது. வாழ்வதற்குத்தான் செல்வம் தேவை, ஆனால், இவுலகில் பலர் செல்வம் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே வாழ்கிறார்கள். அதனால்தான், “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” (லூக் 12:1) என்று கூறி, 'அறிவற்ற செல்வன்' உவமை வழியாக மக்களுக்கு விளக்குகிறார் இயேசு. மேலும் "பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக் கொள்கிறார்கள்" (1 திமொ 6:10) என்று புனித பவுலடியாரும் எச்சரிக்கின்றார். இன்று உலகில் நிகழும் அத்தனைப் போர்களுக்கும் மோதல்களுக்கும், வன்முறைகளுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் செல்வத்தின்மீதான பேராசையே அடிப்படைக் காரணமாக அமைகின்றது. ஆகவே நமது அன்றாடக் கிறிஸ்தவ வாழ்வில், செல்வத்தின்மீதான மிதமிஞ்சிய பற்றை விடுத்து ஏழைகளுக்கு உதவுவதில் முன்னுரிமைக் கொடுப்போம். அவர்தம் வாழ்வு ஏற்றம்பெற உழைப்போம். இவ்வருளுக்காக இந்நாளில் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்