பொதுக் காலம் 5-ஆம் ஞாயிறு : பலவீனத்தில் வெளிப்படும் இறையழைத்தல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. எசா 6: 1-8; II. 1 கொரி 15: 1-11; III. லூக் 5: 1-11)
இன்று பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு சிறப்பிக்கப்படுகிறது. இன்றைய மூன்று வாசகங்களும் பலவீனத்தில் வெளிப்படும் இறையழைத்தல் குறித்துப் பேசுகின்றன. கடவுளின் அழைப்பு என்பது யாருக்குக் கிடைக்கும், யாரால் கிடைக்கும், எப்போது கிடைக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது. ‘நாம் ஒன்று நினைப்போம், தெய்வம் ஒன்று நினைக்கும்’ என்று சொல்வார்கள். அதுபோலத்தான் சிலவேளைகளில் இறையழைதல்களும் அமைகின்றன. பல புனிதர்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இந்த உண்மை நமக்கு விளங்கும். ‘இவனா குருவாகப்போகிறான்’ என்று பலரின் கேலிப்பேச்சுக்கு உள்ளான பலர், குருக்களாகி தூய வாழ்வு வாழ்ந்துள்ளதைப் பார்க்கின்றோம். ஆனால் அதேவேளையில், “இந்தப் பையன் எவ்வளவு பக்தியா இருக்கான் பார்த்தீங்களா, இவன்தான் உண்மையிலேயே சாமியாராகி சரித்திரம் படைக்கப்போறான்” என்று சொல்லப்பட்டவர்கள் எல்லாம் இல்லற வாழ்வுக்குச் சென்றதையும் நாம் கண்டிருக்கிறோம் (ஆனால் இதில் விதிவிலக்குகளும் உண்டு). மேலும் “இவனுக்குச் சரியான படிப்பில்லை, நாம் எதிர்பார்த்த அளவுக்கு இவன் மதிப்பெண்கள் பெறவில்லை, இவனது நிறம் சரியில்லை, இவனது குடும்பச் சூழல் சரியில்லை, இவனிடத்திலே நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு அறிவுத்திறமை இல்லை, இவன் வீட்டிற்கு ஒரே பிள்ளையாக இருக்கின்றான்” என்பன போன்ற காரணங்களால் ஒதுக்கப்பட்ட எத்தனையோ இளையோர் இறையழைதல் பெற்று குருக்களாகி புனிதர் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள்.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் பன்னிரெண்டாம் வகுப்பு படிப்பை முடித்தவுடன் ஒரு பெரிய துறவற சபையில் சேர்ந்தார். அவர் பார்ப்பதற்குச் சற்று குள்ளமாக இருப்பார். எல்லாருடனும் இயல்பாகப் பழகக்கூடியவர், எதையும் நேர்பட பேசக்கூடியவர், விளையாட்டில் நல்ல கெட்டிக்காரர். இத்தனைக்கும் அவர் அந்தச் சபை நடத்திவரும் பள்ளிக் கூடத்தில் படித்தவர்தான். அவருடைய முதற்கட்ட பயிற்சியில் அவர் படிப்பில் சற்று பின்தங்கி இருந்தார். அந்த ஆண்டின் இறுதியில் அவருக்கு இறையழைத்தல் இல்லை என்று கூறி அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். இதை அவர் என்னிடத்தில் கூறி மிகவும் வருத்தமுற்றார். அதற்கு நான், “கடவுளுக்கு உண்மையிலேயே நீ தேவை என்றால், அவர் உன்னை நிச்சயம் அழைப்பார்” என்று கூறினேன். அதன்பிறகு நானும் அவரை மறந்துவிட்டேன். ஏறக்குறைய 18 ஆண்டுகள் கழித்து அவரை இன்னொரு மாநிலத்தில் சந்தித்தேன். அப்போது மிகவும் மகிழ்ச்சியடைந்து, “எப்படி இருக்கிறீர்கள் நண்பரே, இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர், தான் இன்னொரு துறவற சபையொன்றில் சேர்ந்து அருள்பணியாளராகி தற்போது அந்தச் சபையைச் சேர்ந்த குருமாணவர்கள் படிக்கும் இல்லத்தில் அதிபராக இருப்பதாகவும் என்னிடம் கூறினார். நான் வியந்துபோனேன்.
பலவீனத்தில் அழைப்பு
அப்படியென்றால், இறையழைத்தலின் அளவுகோல்தான் என்ன என்று நாம் சிந்திக்கும்போது, கடவுளின் பார்வை வேறு மனிதரின் பார்வை வேறு என்பதை நம்மால் அறிய முடிகிறது. இந்த உலகம் பலவீனமானவர்கள் அல்லது தகுதியற்றவர்கள் என்று கருத்துபவர்களை கடவுள் பலம் பொருந்தியவர்களாக, தகுதியுள்ளவர்களாகத் தேர்ந்துகொள்கின்றார். இதைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் காண்கின்றோம். “ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே” என்று அழுது புலம்பிய எசாயாவிடம், “இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது" என்று கூறி அவரைப் புனிதப்படுத்தி இறைவன் தன் பணிக்காகத் தேர்ந்துகொள்கின்றார். அவ்வாறே இன்றைய இரண்டாம் வாசகத்தில், புனித பவுலடியாரும், "நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன். ஏனெனில், கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால், இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான்” என்று கூறி, பலவீனத்தில் தான் பெற்ற அழைப்புக் குறித்து மொழிகின்றார்.
இன்றைய நற்செய்தியில் முதல் சீடர்கள் அழைப்புப் பெறும் நிகழ்வு கொடுக்கப்பட்டுள்ளது. முதல் சீடர்களின் அழைப்புக் குறித்து மற்ற ஒத்தமை நற்செய்தியாளர்கள் இருவரும் பதிவுசெய்துள்ளனர் (காண்க. மத் 4:18-22; மாற் 1:16-20). ஆனாலும் லூக்கா நற்செய்தியாளர் கொடுத்துள்ள அளவிற்கு விரிவாக மற்றவர்கள் கூறவில்லை. பேதுருவின் பலவீனத்தை இங்கே எடுத்துக்காட்டுகிறார் லூக்கா. “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்று தன்னிடம் உரைத்த இயேசுவின் வார்த்தைக்குக் கிடைத்த பலனை நேரில் கண்ட பேதுரு, அவரின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்கிறார். இங்கே இயேசுவின் இறைத்தன்மையை, மெசியாத்தன்மையை, மற்றும் அவரின் மகத்துவத்தை கண்டுகொண்டதலானேயே இவ்வாறு கூறுகிறார் பேதுரு. மேலும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புறும் மற்றவர்களும் பேதுருவுடன் இணைந்து இயேசுவைப் பின்பற்றுகின்றனர்.
பேதுருவின் பலவீனமும் பலமும்
பொதுவாக, பேதுருவின் வாழ்வில் பலவீனமும் பலமும் ஒன்றிணைந்து செல்வதைப் பார்க்கின்றோம். “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” (லூக் 5:8) என்று தன்னை ஏற்றுக்கொண்டவர், “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது” (மத் 16:22) என்று இயேசுவின் தியாகச் சாவை தடுக்க முனைந்தவர், உருமாற்ற நிகழ்வின்போது, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது" (மத் 17:4) என்று கூறி சவாலை சந்திக்கத் தயங்கியவர், “எல்லாரும் ஓடிப்போய்விட்டாலும் நான் அவ்வாறு செய்யமாட்டேன்” என்றும், “நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்” (மாற் 14: 29,31) என்றும் உணர்ச்சிவசப்பட்டு பேசியவர். இறுதியாக இயேசுவை மறுதலித்தபோதிலும், தான் புரிந்த அந்த மாபெரும் தவற்றிற்காக மனம் வெதும்பி அழுத்தவர் (லூக் 22:61-62). ஆக, இத்தனை பலவீனங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தவர்தான் பேதுரு. ஆனால் மறுபக்கம், “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று இயேசு எழுப்பிய கேள்விக்கு, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” (மத் 16:13-17) என்று உண்மையை உள்ளவாறு உரைத்தவர். மேலும், இயேசு பன்னிரு சீடரிடம், “நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா?” என்று கேட்டபோது, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்” (யோவா 6:68) என்று பதில்மொழி தந்தவர். ஆக, இயேசுவின்மீது பேதுரு கொண்டிருந்த ஆழமான ஆன்மிக பலம்தான் அவரது மனித பலவீனங்களை அழித்தொழித்தது. இந்த ஆன்மிக பலம்தான் தொடக்க காலத் திருஅவையில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் அவரைத் தலைமைப் பொறுப்பேற்க வைத்து அதனை பலம்பொருந்தியதாக மாற்ற வழிகாட்டியது. பலவீனம் இருக்கும் மனிதரிடத்தில்தான் கடவுள் தனது பலத்தைக் கட்டியெழுப்புகிறார். பள்ளத்தை நோக்கிப் பாய்ந்தோடும் தண்ணீர் அதனை முழுமையாக நிரப்புவதுபோல, பலவீனமான பாவியின் உள்ளதை நோக்கிப் பாய்ந்தோடும் இறைவனின் அருள் அதனை நிரப்பி அவரைப் பலம்பொருந்தியவராக மாற்றுகிறது.
புனித ஜான் மரிய வியான்னி
‘பலவீனத்தில் வெளிப்படும் இறையழைத்தல்’ என்று நான் நினைக்கும்போதெல்லாம் என் நினைவுக்கு வருபவர் புனித ஜான் மரிய வியான்னி. இன்று அனைத்து அருள்பணியாளர்களின், அதிலும் குறிப்பாக, பங்குப் பணி செய்கின்ற அருள்பணியாளர்களின் பாதுகாவலராகப் போற்றப்படுகிறார். காண்பதற்கு ஈர்ப்பான உருவம் அவருக்கு இல்லை. காலத்தால் அழியாத எந்த ஒரு நூலையும் அவர் எழுதவில்லை. இலத்தீன் மொழியை அவரால் படிக்க முடியவில்லை. அவருடைய அறிவுக்கூர்மை மிகவும் குறைந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் மிகவும் பக்தியாக வளர்ந்த அவருக்கு குருவாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் அவர் தன்னுடைய 18-வது வயதில் குருமடத்தில் சேர்ந்தார். குருமடத்தில் சேர்ந்த இவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சிக் காத்திருந்தது. அந்தக் காலத்தில் குருமடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடங்கள் அனைத்தும், இலத்தின் மொழியில் இருந்ததால் சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்த வியான்னியால் அவற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை, சரியாகப் படிக்கவும் முடியவில்லை. அவருக்கென்று தனிப்பட்ட முறையில் ஆசிரியர்களை நியமித்து பாடங்களைச் சொல்லிக்கொடுத்தபோதும் கூட, அவரால் பாடங்களைப் படிக்க முடியவில்லை. இதனால் அவர் சரியான ‘மக்கு’, ‘கழுதை’ என அழைக்கப்பட்டு, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அத்தகையத் தருணங்களில் அவருடைய ஆன்ம குருவான பெல்லிதான், “வியான்னி படிப்பில் வேண்டுமானால் பின்தங்கியவராக இருக்கலாம். ஆனால் ஆன்மிகத்திலும், செப வாழ்விலும் மற்ற எல்லாரையும் விட அவர் உயர்ந்தவராக இருக்கிறார்” என்று சொல்லி, அவர் குருவாக மாறுவதற்கு உறுதுணையாக இருந்தார். இதன்காரணமாக, 1815-ஆம் ஆண்டு மரிய வியான்னி குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.
ஆனால் அவர் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்ட பிறகும்கூட, ஓராண்டு காலம் அவருக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. காரணம், அவர் அறநெறி இறையியலில் (Moral Theology) மிகவும் பின்தங்கி இருந்ததால் இவ்வாறு நிகழ்ந்தது. ஆனால் ஓராண்டிற்குப் பிறகு அவருக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டது. அவரிடத்தில் முதன்முறையாக ஒப்புரவு அருள்சாதனம் பெற்றது அவருடைய ஆன்மிக குரு பெல்லிதான். அவர் ஒப்புரவு அருள்சாதானத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு வியான்னியிடத்தில், “ஒரு காலத்தில் உன்னிடம் ஒப்புரவு அருள்சாதனம் பெற ஆயர்கள், கர்தினால்கள் முதற்கொண்டு எல்லாரும் வருவார்கள்” என்று கூறினாராம். வியான்னியின் ஆன்ம குரு சொன்னது அப்படியே நடந்தது. வியான்னி ஆர்ஸ் நகரில் பங்குத்தந்தையாக 41 ஆண்டுகள் பணியாற்றியபோது, அவரிடத்தில் ஒப்புரவு அருள்சாதனம் பெற எத்தனையோ பெரிய பெரிய மனிதர்கள் வந்தார்கள். அவரிடத்தில் ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெறுவோருக்காக சிறப்புப் பேருந்துகள், தொடர்வண்டிகள் இயக்கப்பட்டன. பலர் வாரக் கணக்கில், மாதக்கணக்கில் காத்திருந்து அவரிடம் ஒப்புரவு அருள்சாதனம் பெற்றனர்.
இந்த உலகம் இழிவானவராகக் கருதுவோரை கடவுள் உயர்வானவராகத் தேர்ந்துகொள்கிறார். “கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!” (திபா 118:22-23) என்ற மறைநூல் வாக்கு இவர்களின் வாழ்வில் நிறைவேறுவதைப் பார்க்கின்றோம். தனது பணிவாழ்வின்போது இயேசுவும் இக்கூற்றை எடுத்துக்காட்டுகிறார் (மாற் 12:1-11). ஆண்டவர் தாவீதை திருப்பொழிவு செய்வதற்கு முன்பாக என்ன நிகழ்கிறது என்பதை சாமுவேல் முதல் நூலில் வாசிக்கின்றோம். கடவுள் இறைவாக்கினர் சாமுவேலை பெத்லகேமைச் சார்ந்த தாவீதின் தந்தையான ஈசாயிடம் அனுப்புகின்றார். அங்குச் செல்லும் அவர், ஈசாயின் புதல்வர்கள் ஒவ்வொருவரையும் பார்க்கும்போதும், ‘கடவுள் தெரிந்துகொண்டது இவராகத்தான் இருக்குமோ’ என்று எண்ணும் வேளையில், ஆண்டவர் சாமுவேலிடம், “அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில், நான் அவனைப் புறக்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” (காண்க. 1 சாமு 16:7) என்று கூறுகின்றார்.
இறையழைத்தல் ஊக்குவிப்பு & உருவாக்கப் பயிற்சி
இன்றைய நற்செய்தி நம்மிடம் இருக்கவேண்டிய ஒரு முக்கியமான பொறுப்புணர்வையும் நமக்குக் கோடிட்டுக் காட்டுகிறது. பாவிகளாகவும் பலவீனமானவர்களாகவும் கருதப்பட்ட நம்மை கடவுள் தனது பணிக்காகத் தேர்ந்தெடுத்து உயர்த்தியதுபோல, நாமும் சமுதாயத்தில் வாழும் இப்படிப்பட்ட இளையோரைத் தேடிக்கண்டுபிடித்து அவர்களைக் கடவுளிடம் கொண்டு வரவேண்டும். இதனைத்தான் “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று இயேசு பேதுருவிடம் உரைக்கின்றார். ஆகவே, குருமாணவர்களின் உருவாக்கப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இருபால் துறவறத்தார், மறைமாவட்டப் பணியாளர்கள் யாவரும் இதனை நன்கு தங்களின் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். இதில் விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்யும், மறுப்பதற்கில்லை. ஆனாலும் இறையழைத்தலை ஊக்குவிப்பதிலும் அதனை வளர்த்தெடுப்பதிலும் இறைத்தந்தையின் மனநிலையையும், இயேசுவின் மனநிலையையும் அவர்கள் கொண்டிருக்க வேண்டும். மிக முக்கியமாக, இறையழைத்தலை ஊக்குவிக்கும் பணியில், சாதி, மதம், இனம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றைத் தாண்டி சிந்திக்க வேண்டும். காரணம், கடவுள் யாரை வேண்டுமானாலும் தனது பணிக்குத் தேர்வு செய்யலாம். அப்படியென்றால், இந்த இறையழைத்தலை ஊக்குவிப்பதில் நாம் வெறும் கருவிகளாக மட்டுமே செயல்பட வேண்டும். அதற்காக குருத்துவப் பயிற்சியில் இருப்பவர்கள் செய்யும் தவறுகளை எல்லாம் பொருத்துக்கொள்ள வேண்டும் என்றோ அல்லது சகித்துக்கொள்ள வேண்டும் என்றோ பொருள் அல்ல. ஆனால் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பளிக்க வேண்டும். அதேவேளையில், தாங்கள் இறையழைத்தல் பெற்றுள்ளோம் என்பதை அறிந்திருந்தும் அதனை எவ்வித்திலும் காப்பாற்றிக்கொள்ள முயற்சிக்காமல், பொறுப்பற்று மீண்டும் மீண்டும் தவறுகளை இழைப்போர் கண்டிப்பாகக் களையப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இருக்க முடியாது.
ஆகவே, பலவீனத்தில் இறையழைத்தல் பெற்ற மோசே, எசாயா, எரேமியா, பேதுரு, மத்தேயு, சக்கேயு, பவுலடியார், அகுஸ்தினார், இஞ்ஞாசியார், ஜான் மரியா வியானி ஆகியோரின் வரிசையில் இறையழைத்தல் பெற்றுள்ள நாமும் அதனை ஊக்குவித்து, இவ்வுலகில் இயேசு கனவு கண்ட இறையாட்சியைக் கட்டியெழுப்புவோம். அதற்கான அருளை இந்நாளில் இறைவனிடம் கேட்டு மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்