காங்கோ ஜனநாயகக் குடியரசில் போர்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காங்கோ ஜனநாயகக் குடியரசில் போர்களை முடிவுக்குக் கொண்டு வரவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும், தேவையில் உள்ளவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யவும் அவசர அனைத்துலக நடவடிக்கைக்கு அழைப்புவிடுத்துள்ளார் COMECE எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவர் ஆயர் Mariano Crociata.
இந்த வாரம் காங்கோ ஜனநாயகக் குடியரசு தொடர்பான தீர்மானத்தின் மீது ஐரோப்பிய நாடாளுமன்றம் வாக்களிக்கத் தயாராகி வரும் நிலையில், பிப்ரவரி 12, இப்புதன்கிழமையன்று அறிக்கையொன்றில் இத்தகைய அழைப்பை விடுத்துள்ளார் ஆயர் Crociata.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC), குறிப்பாக கோமாவில் மனிதாபிமான, பாதுகாப்பு மற்றும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள வேளை, அங்குப் போர்நிறுத்தம் ஏற்படுத்தவும் பொதுமக்களைப் பாதுகாக்கவும் விண்ணப்பித்துள்ளார் ஆயர் Crociata.
கோமாவில் M23 என்ற குழுவினுடைய கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களால் ஏறக்குறைய 3,000 பேர் இறந்துள்ளனர் மற்றும் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ள ஆயர், மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள், பரவலான பாலியல் வன்முறை மற்றும் உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவப் பொருள்களின் கடுமையான பற்றாக்குறை குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான தீர்வுக்கான திருத்தந்தையின் வேண்டுகோளுக்கு ஆதரவு அளித்துள்ள ஆயர் Crociata அவர்கள், மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ள 60 மில்லியன் யூரோ பண உதவிக்காகப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
மேலும் M23 என்ற குழுவின் கிளர்ச்சியாளர்களுக்கான ஆதரவை நிறுத்தவும் மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசின் இறையாண்மையை மதிக்கவும் ருவாண்டா உட்பட வெளிநாட்டுத் தரகு வணிகர்களுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தியுள்ளார் ஆயர் Crociata.
காங்கோ ஜனநாயகக் குடியரசின் வளங்களைச் சுரண்டுவதைத் தடுக்கவும், வர்த்தக ஒப்பந்தங்களின் பொருளாதாரத் தடைகள் மற்றும் மறுமதிப்பீடு போன்ற பொருளாதார நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ள ஆயர் Crociata அவர்கள், தலத்திருஅவைகள் மற்றும் வட்டார நிறுவனங்களின் தலைமையில் அமைதி முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கவும் விண்ணப்பித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்