தேடுதல்

Cookie Policy
The portal Vatican News uses technical or similar cookies to make navigation easier and guarantee the use of the services. Furthermore, technical and analysis cookies from third parties may be used. If you want to know more click here. By closing this banner you consent to the use of cookies.
I AGREE
பிரேசிலின் Aparecida அன்னை மரியா திருத்தலம் பிரேசிலின் Aparecida அன்னை மரியா திருத்தலம் 

அன்னை ஓர் அதிசயம் – Aparecida அன்னைமரியா திருத்தலம், பிரேசில்

பிரேசில் மீனவர்கள் தங்கள் வலையில் கிட்டிய துண்டுகளை சுத்தப்படுத்திப் பார்த்தபோது அது, அமலமரி அன்னையின் திருவுருவம் எனக் கண்டு, அவ்வன்னைக்கு, “தண்ணீரில் தோன்றிய அமலமரி” எனப் பெயரிட்டனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

Ronald Knox என்பவர் சொல்லியிருப்பதுபோல, புனித கன்னிமரியா எப்பொழுதும் சரியான காலத்தில், சரியான இடத்தில் காட்சி கொடுத்து இந்த மனித சமுதாயத்துக்குப் பல நன்மைகளைச் செய்து வருகிறார். பல இறையுண்மைகளை வெளிப்படுத்தி மக்கள் இறைவனிடம் திரும்புவதற்கு வழிசெய்து வருகிறார். Aparecida அன்னைமரியா திருத்தலம், உலகிலுள்ள வியத்தகு திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு கோடியே 20 இலட்சத்துக்கு அதிகமான திருப்பயணிகள் இந்த Aparecida அன்னைமரியா திருத்தலத்துக்குச் சென்று இறையன்னையின் அருள்வரங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.

பிரேசில் நாடு, 1500ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி போர்த்துக்கீசியரான Pedro Álvares Cabral என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. உலகிலே கத்தோலிக்கரை அதிகமாகக் கொண்டுள்ள நாடான பிரேசிலில் 95 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். இந்நாடு, இலத்தீன் அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக மட்டுமல்லாமல், பரப்பளவிலும் பெரியதாக உள்ளது. தென் அமெரிக்காவில் சிலே மற்றும் ஈக்குவதோர் நாடுகளைத் தவிர, மற்ற அனைத்து நாடுகளையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது பிரேசில். பெரு நாட்டின் அமேசான் காடுகளில் உற்பத்தியாகும் அமேசான் நதி பிரேசிலில்தான் அதிகத் தூரத்தைக் கடந்து  அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கின்றது. இத்தனை பெருமைக்குரிய பிரேசிலின் தெற்கேயுள்ள São Paulo மாநிலத்தில்தான் உலகப் புகழ்பெற்ற Aparecida அன்னைமரியா திருத்தலம் அமைந்துள்ளது. அன்னைக்கென அர்ப்பணிக்கப்பட்ட உலக திருத்தலங்களுள் இதுவே பெரியதாகும். புனித பவுல் என்று பொருள்படும் São Paulo நகரம், பிரேசிலிலும், அமெரிக்காவிலும், உலகின் தெற்கு கோளத்திலும் பெரிய நகரமாகும். மக்கள்தொகைப்படி இது உலகின் முதல் 10 நகரங்களுள் ஒன்றாகும். Aparecida என்றால் போர்த்துக்கீசிய மொழியில் “தோன்றிய” என்று அர்த்தம். எனவே Aparecida அன்னைமரியா, “தோன்றிய அன்னைமரியா” என்றும் அழைக்கப்படுகிறார். இறைவனின் தாயாம் அன்னைமரியா, இப்பெயரில் அழைக்கப்படுவதற்கு ஒரு வரலாறு இருக்கின்றது.

1717ஆம் ஆண்டின் அக்டோபரில், São Paulo மாநில ஆளுனர் Dom Pedro de Almedida என்பவர், São Pauloவிலிருந்து Minas Gerais என்ற மாநிலத்துக்குச் செல்லும் வழியில் Guaratinguetá என்ற சிறிய கிராமத்தின் வழியாகச் செல்லவிருக்கின்றார் என்ற செய்தி அக்கிராமத்தினருக்கு கிடைத்தது. ஆதலால் இக்கிராம மக்கள் அந்த ஆளுனருக்குப் பெரிய விருந்தளிக்க விரும்பினர். அதற்கு நிறைய மீன்கள் தேவைப்பட்டன. Guaratinguetá கிராமம், Paraíba ஆற்றுப்பள்ளத்தாக்கிலுள்ளது. உள்ளூர் அதிகாரிகள், Domingos Garcia, Filipe Pedroso, João Alves ஆகிய மூன்று மீனவர்களையும் Paraiba ஆற்றில் மீன்பிடித்துவருமாறு அனுப்பினர். இந்த மூன்று மீனவர்களும் அமலமரித் தாயிடம் மிகுந்த பக்தி கொண்டவர்கள். இவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் முன்னர் இந்தக் கடினமான தொழிலில் தங்களுக்கு உதவி செய்யுமாறு இறைவனிடம் செபித்துவிட்டுச் செல்வது வழக்கம். இவர்கள், நிறைய மீன்கள் கிடைக்க வேண்டுமென்று இம்முறையும் செபித்துவிட்டுச் சென்றனர். ஆனால் இம்முறை, பல தடவைகள் முயன்றும் மீன்கள் ஒன்றும் கிடைக்கவே இல்லை. இம்மூவரில் Filipe Pedroso என்பவர் மற்ற இருவருடன் சேர்ந்து முழங்கால்படியிட்டு, ‘இறைவனின் தாயே, எங்கள் அன்னையே, எங்களுக்கு மீன்கள் கிடைக்க வேண்டும்’ என்று உருக்கமாகச் செபித்தார். ஆனாலும் மீன்கள் கிடைக்கவே இல்லை. அவர்கள் மிகவும் மனச்சோர்வடைந்தனர்.

Paraiba ஆற்றில் வெகுதூரம் சென்று Porto Itaguaçu என்ற இடத்தை அவர்கள் அடைந்தனர். அந்த இடத்தில் João Alves முதலில் வலையை வீசினார். மீனுக்குப் பதிலாக, ஒரு சிலையின் தலையில்லாத உடல் அவரது வலையில் சிக்கியது. பின்னர் அவர்கள் மூவரும் தங்களின் வலைகளை வீசி அதன் தலையை எடுத்தனர். அவையிரண்டையும் சுத்தப்படுத்திப் பார்த்தபோது அது, அமலமரி அன்னையின் திருவுருவம் எனக் கண்டுபிடித்தனர். தாங்கள் கண்டுபிடித்த அவ்வன்னைக்கு, “தண்ணீரில் தோன்றிய அமலமரி” எனப் பெயரிட்டனர். அதனைச் சுருக்கமாக “Aparecida” அதாவது “தோன்றிய அன்னைமரி” என அழைத்தனர். அத்திருவுருவத்தை ஒரு துணியில் சுற்றிப் படகில் பாதுகாப்பாக வைத்தனர். அப்போது Domingos மற்ற இருவரிடமும், “நாம் இரவு முழுவதும் வலைகளை வீசினோம், மீன்கள் ஒன்றும் அகப்படவில்லை” என்று சொன்னார். உடனே Filipe, “Aparecida அன்னைமரியாமீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வலைகளை வீசுவோம்” என்று சொன்னார். அவர்கள் ஆற்றில் வலைகளை வீசினர். வியக்கத்தக்க விதமாக, வலைகள் நிரம்பிவழியும் அளவுக்கு மீன்களை ஏராளமாகப் பிடித்தனர். இதுவே Aparecida அன்னைமரி நிகழ்த்திய முதல் புதுமையாகும். பின்னர் இந்த இறைத்தாயின் பரிந்துரையால் தொடர்ந்து புதுமைகள் இடம்பெறத் தொடங்கின.

இம்மூன்று மீனவர்களில் ஒருவராகிய Filipe Pedroso, Aparecida அன்னைமரி திருவுருவத்தை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று தனது குடும்பத்தினர் மற்றும் அவர் வீட்டருகில் வாழ்ந்த பிற மீனவர்களோடு அதற்கு மேலான வணக்கம் செலுத்தத் தொடங்கினார். 1732ஆம் ஆண்டில் Porto Itaguassu என்ற இடத்துக்கு Filipe குடிபெயர்ந்தபோது Aparecida அன்னைமரியா திருவுருவத்தையும் தன்னோடு எடுத்துச் சென்றார். அவரது மகன் அத்தனாசியோ ஒரு சிற்றாலயம் கட்டினார். அதில் Aparecida அன்னைமரி திருவுருவத்தை வைத்து பக்தியோடு வணங்கி வந்தனர். இதுதான் Aparecida அன்னைமரிக்கு எழுப்பப்பட்ட முதல் திருத்தலமாகும். பின்னர் இத்தாயின் புகழ் அப்பகுதியெங்கும் பரவத் தொடங்கியது. பலர் அங்குத் திருப்பயணமாக வரத் தொடங்கினர். ஆதலால் Porto Itaguassuவுக்கு அருகிலிருந்த குன்றில் பெரிய ஆலயம் கட்டுவதற்கு மக்கள் தீர்மானித்தனர். 1745ஆம் ஆண்டில் இவ்வாலயம் திறக்கப்பட்டது. Paraiba ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட Aparecida அன்னைமரி திருவுருவம் இவ்வாலயத்தில் வைக்கப்பட்டது. இவ்வாறு Aparecida கிராமம் உருவானது. இது, Guaratinguetá மாவட்டத்தின் ஒரு பகுதியானது.

இந்த மாதா திருவுருவம் எப்படி ஆற்றுக்கடியில் கிடந்தது என்பது தெரியவில்லை. ஆயினும் சிற்பங்கள் செய்வதில் கைதேர்ந்த São Paulo துறவி அகுஸ்தீனோ தெ ஜேசுஸ் என்பவர் இத்திருவுருவத்தை வடித்ததாகச் சொல்லப்படுகின்றது. 3 அடிக்கும் குறைவான உயரமுடைய Aparecida மாதா திருவுருவம் ஏறக்குறைய 1650ஆம் ஆண்டில் செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. இது பல ஆண்டுகள் தண்ணீரிலே கிடந்ததால் இதன் பலவண்ணக் கலைவேலைப்பாடுகளை இப்போது காண முடியாது. இத்திருவுருவம், அழகான கருமர நிறத்தில் உள்ளது. இதன் முகம் மட்டுமே தற்போது தெரிகிறது. உடல்பகுதி விலையுயர்ந்த பொருள்களாலான தடித்த துணியால் போர்த்தப்பட்டுள்ளது. பேரரசிக்குரிய விலைமதிப்பற்ற கற்களாலான கிரீடம் தலையில் வைக்கப்பட்டுள்ளது. இக்கிரீடத்தால் அன்னை மரியாவுக்கு முடிசூட்டப்பட திருத்தந்தை 10ஆம் பயஸ் 1904ஆம் ஆண்டில் ஒப்புதல் வழங்கினார். திருத்தந்தை 11ஆம் பயஸ், 1930ஆம் ஆண்டில், Aparecida அன்னைமரியாவை, பிரேசிலின் பேரரசியாகவும், பாதுகாவலராகவும் அறிவித்தார். பிரேசில் நாடும் Aparecida அன்னைமரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. Aparecida அன்னைமரியா திருவிழா அக்டோபர் 12ஆம் தேதியன்று சிறப்பிக்கப்படுகின்றது. அன்று பிரேசிலுக்குத் தேசிய விடுமுறையாகும்.

Aparecidaவிலுள்ள பழைய ஆலயம், 1,760க்கும் 1,770க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டு 1824க்கும் 1834க்கும் இடைப்பட்ட காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. தற்போதுள்ள ஆலயம், 1955ஆம் ஆண்டில் Benedito Calixto என்ற கட்டிடக் கலைஞரால் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இப்புதிய பசிலிக்கா கிரேக்கச் சிலுவை வடிவத்தில், 617 அடி நீளத்தையும், 600 அடி அகலத்தையும் கொண்டுள்ளது. அதன் குவிமாடம் 335 அடி உயரத்துக்குச் செங்குத்தாகச் செல்கின்றது. இப்பசிலிக்காவில் 45 ஆயிரம் மக்கள்வரை அமரலாம். விழா நாள்களில் 70 ஆயிரம் பேர்வரை உள்ளிருக்கின்றனர். வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் 4,000 பேருந்துகளும், 6,000த்துக்கு மேற்பட்ட வாகனங்களும் நிற்கலாம். 1980ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதியன்று புனித திருத்தந்தை 2ஆம் ஜான் பால் அவர்கள், இப்புதிய ஆலயத்தை பசிலிக்காவாக அறிவித்தார். அப்போது அவ்வாலயம் கட்டி முடிக்கப்படாமல் இருந்தது. பிரேசிலுக்குத் திருப்பயணம் மேற்கொண்ட முதல் திருத்தந்தை என்ற பெயரையும் இவர் பெற்றார். இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆயர் பேரவையின் 5வது பொதுப் பேரவையை முன்னிட்டு 2007ஆம் ஆண்டு மே மாதத்தில் பிரேசிலுக்குத் திருப்பயணம் மேற்கொண்ட முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் மே 12ஆம் தேதியன்று Aparecida அன்னைமரியா திருத்தலம் சென்று அத்தாய்க்கு ஒரு தங்க ரோஜாவையும் அர்ப்பணித்தார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இந்த Aparecida திருத்தலத்துக்குத் திருப்பயணமாகச் சென்று அவ்வன்னையைத் தரிசித்துள்ளார்.

Aparecida அன்னைமரியா பிரேசிலுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் “தோன்றிய” தாயாக விளங்குகிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 பிப்ரவரி 2025, 14:32
Prev
March 2025
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Next
April 2025
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930