மியான்மார் கத்தோலிக்கர்கள் அமைதிக்காக உழைக்க வேண்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கத்தோலிக்கர்கள் அமைதிக்காக உழைக்குமாறு மியான்மார் கர்தினால் சார்லஸ் மவுங் போ அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாகக் கூறியுள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.
அந்நாட்டு குடிமக்களின் வீடுகளை இராணுவ ஆட்சிப் படைகள் தீயிட்டுக் கொளுத்தியதாகக் கூறப்படும் செய்திகளுக்கு மத்தியில், மோதல்களால் பாதிக்கப்பட்ட நாட்டில், அமைதி, நல்லிணக்கம் மற்றும் மன்னிப்பின் முக்கியத்துவத்தை கர்தினால் போ அவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.
பிப்ரவரி 11, புனித லூர்து அன்னையின் விழாவை முன்னிட்டு, அந்நாட்டின் நியாங்லெபினின் அன்னை மரியா கோவிலில் திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் போ அவர்கள், தனது மறையுரையில், "அன்னை மரியாவின் அருளால் ஈர்க்கப்பட்டு, மியான்மாரில் போரிடும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டுமென நாம் இறைவேண்டல் செய்வோம்" என்று கூறியதாகவும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.
38 இலட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்ட மியான்மார் நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணிலும் ஒரு கர்ப்பிணி அன்னை மரியாவின் முகம் பிரதிபலிக்கிறது என்று கர்தினால் போ கூறியதாகவும் எடுத்துரைக்கிறது அச்செய்தித் தொகுப்பு.
3,000-க்கும் மேற்பட்ட கத்தோலிக்கர்கள், மூன்று ஆயர்கள், ஏராளமான அருள்பணியாளர்கள், மற்றும் இருபால் துறவறத்தார், அத்துடன் பௌத்த, முஸ்லீம் மற்றும் இந்து மத நம்பிக்கையாளர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் என்றும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்