திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – ஆணைமடல் பகுதி 15
மெரினா ராஜ் – வத்திக்கான்
இறைவாக்கினர்களின் பண்டைய வார்த்தையை எதிரொலிக்கும் விதமாக இப்பூமியில் உள்ள பொருள்களானது, இவ்வுலகில் சிறப்பு சலுகை பெற்ற சிலருக்கானது அல்ல, மாறாக, நம் அனைவருக்குமானது என்பதை யூபிலி ஆண்டு நினைவுபடுத்துகின்றது. செல்வ வளம் கொண்டவர்கள் தங்களது அருகில் வாழும் தேவையில் இருக்கும் மக்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உதவும் தாராள மனம் கொண்டவர்களாக இருக்கவேண்டும். குறிப்பாக உணவு மற்றும் நீர் இல்லாத மக்களைப் பற்றி சிந்திப்போம். பசி என்பது மனிதகுலத்தின் உடலில் ஏற்படும் ஓர் அவமானகரமான கொள்ளைநோய். வாதை. அது நம் அனைவரையும் மனசாட்சியின்படி நடக்க வலியுறுத்துகின்றது. ஆயுதங்கள் மற்றும் பிற இராணுவச் செலவுகளுக்குச் செலவிடப்படும் பணத்தில், பசியை ஒழிப்பதற்காகவும், ஏழ்மையான நாடுகளின் வளர்ச்சிக்காகவும் ஓர் உலக நிதியை நிறுவவேண்டும் என்ற எனது (திருத்தந்தை பிரான்சிஸ்) வேண்டுகோளை புதுப்பிக்கின்றேன். இதனால் மக்கள் வன்முறை மற்றும் ஏமாற்றும் முடிவுகளை நாட வேண்டிய சூழலும், மாண்புள்ள வாழ்க்கையைத் தேடி தங்கள் நாடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயமும் ஏற்படாது.
யூபிலி ஆண்டைக் கருத்தில் கொண்டு நான் விடுக்கும் மற்றோர் இதயப்பூர்வமான அழைப்பு: மிகவும் வசதியான நாடுகள் தங்களிடம் கடன் பெற்று அதனைத் திருப்பிச் செலுத்த இயலாமல் இருக்கும் நாடுகளின் கடன்களை மன்னித்து தள்ளுபடி செய்ய வேண்டும். திருவிவிலியம் கற்பிப்பது போல நிலம் என்னுடையது. நீங்களோ என்னைப் பொறுத்தவரையில் அந்நியரும் இரவற்குடிகளுமே (லேவி 25:23) என்பதை நினைவிற்கொள்வோம். நாம் வாழ்கின்ற இப்பூமிக் கடவுளுக்குச் சொந்தமானது, நாம் அனைவரும் இங்கு அந்நியர்களாகவும் விருந்தினர்களாகவும் வாழ்கிறோம் உலகில் அமைதிக்கான பாதையை நாம் உண்மையிலேயே ஏற்படுத்த விரும்பினால், அநீதியை சரிசெய்யவும், கடன்களைத் தள்ளுபடி செய்யவும், பசியோடு இருப்பவர்களுக்கு நிறைவளிக்கவும் நம்மையே நாம் அர்ப்பணித்துக் கொள்வோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்