இந்தியாவின் மணிப்பூரில் அரசியல் மாற்றத்தை வரவேற்கும் கிறிஸ்தவர்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் உள்ள கிறிஸ்தவத் தலைவர்கள், அதன் முதலமைச்சர் பிரேன் சிங் அவர்கள் பதவி விலகியுள்ளதை வரவேற்றுள்ளதாகக் கூறியுள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.
குக்கி பழங்குடியின கிறிஸ்தவர்களுக்கும், இந்து பெரும்பான்மையான மெய்தி இன மக்களுக்கும் இடையே தொடர்ந்து அமைதியின்மை நிலவி வரும் நிலையில், பிப் 9, ஞாயிறன்று, அம்மாநிலத்தின் ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் முதல்வர் பிரேன் சிங் தனது பதவி விலக்கல் கடிதத்தை சமர்ப்பித்த வேளை இவ்வாறு கிறிஸ்தவத் தலைவர்கள் தெரிவித்துள்ளதாக உரைக்கின்றது அச்செய்தி நிறுவனம்.
“முதலமைச்சரின் பதவி விலகல் என்பது, வன்முறையால் அழிக்கப்பட்ட அம்மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கை" என்றும், "இப்போது அமைதியையும் அம்மாநில மக்களின் சிதைந்த வாழ்க்கையையும் மீட்டெடுப்பதற்கு இது அரியதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது" என்றும், தனது பெயரை வெளியிட விரும்பாத கிறிஸ்தவத் தலைவர் ஒருவர் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளது அச்செய்தி நிறுவனம்.
"இம்மாநிலத்தின் முதலமைச்சராக சிங் இருந்தது அதன் அமைதிக்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருந்தது, ஏனெனில் பூர்வகுடி குக்கி-சோ மக்கள் அவரை ஒருபோதும் நம்பவில்லை" என்று தலத்திருஅவையைச் சேர்ந்த இன்னொரு தலைவர் சுட்டிக்காட்டியதாவும் கூறுகிறது அச்செய்தி.
இந்த வன்முறையின்போது, ஏறத்தாழ 11,000 வீடுகள் மற்றும் 360 கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் எரிக்கப்பட்டன, மேலும் பள்ளிகள், பங்குத்தளங்கள் மற்றும் பிற அலுவலகங்கள் உட்பட ஏராளமான கிறிஸ்தவ நிறுவனங்கள் அழிக்கப்பட்டன என்றும் எடுத்துக்காட்டுகிறது அச்செய்தி நிறுவனம். (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்