திருத்தந்தையின் கடிதத்திற்கு சிக்காகோ கர்தினால் Blase Cupich வரவேற்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம்
புலம்பெயர்ந்தோர் தொடர்பான அமெரிக்க ஆயர்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தை வரவேற்றுள்ளார் சிக்காகோ பேராயர் கர்தினால் Blase Cupich.
பிப்ரவரி 11, செவ்வாய்க்கிழமையன்று, புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் மற்றும் மாண்பை பாதுகாப்பதற்கான அமெரிக்க ஆயர்களின் முயற்சிகளுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள வேளை, இது குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில், அவரின் இந்தக் கடிதத்தை வரவேற்பதாகக் கூறியுள்ளார் கர்தினால் Cupich.
மேலும் புலம்பெயர்ந்தோரின் மாண்பு மற்றும் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளுக்குத் திருத்தந்தை அவர்கள் வழங்கியுள்ள ஆதரவையும் பாராட்டியுள்ள கர்தினால் Cupich அவர்கள், மிகவும் பாதிக்கப்படக் கூடிய உறுப்பினர்களை அது எவ்வாறு நடத்துகிறது என்பதன் மூலம் நீதியான சமூகம் அளவிடப்படுகிறது என்று திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளதையும் கோடிட்டுக்காட்டியுள்ளார் கர்தினால் Cupich.
அதேவேளையில், மனித மாண்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் கொள்கைகளை விமர்சன ரீதியாக மதிப்பிடுவதற்கும், சவாலுக்கு உட்படுத்துவதற்கும் கத்தோலிக்கர்கள் நன்கு வடிவமைக்கப்பட்ட நேர்மையான உணர்வுகளை (well-formed consciences) உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார் கர்தினால் Cupich. (ICN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்