அமெரிக்க ஆயர்கள் : டிரம்பின் நடவடிக்கைகள் கவலை தருகின்றன
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
அமெரிக்க ஐக்கிய நாட்டின் புதிய அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்களின் புதிய நடவடிக்கைகள் மிகவும் வேதனை தருவதாக உள்ளன என கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
புதிய அரசுத்தலைவர் டிரம்ப் அவர்களின் குடியேற்றதாரர், மரணதண்டனை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த அணுகுமுறைகள் மிகவும் கவலையைத் தருவதாக உள்ளன என்ற அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Timothy Broglio அவர்கள், தேசிய நலனுக்காக என்று சொல்லப்பட்டாலும், அதன் விளைவுகள் ஒழுக்கரீதிக் கோட்பாடுகளுக்கு எதிராகச் செல்கின்றன என கூறினார்.
குடியேற்றதாரர்களும் அகதிகளும் நடத்தப்படும் விதம், வெளி நாடுகளுக்கு உதவிகள், மரணதண்டனை விரிவாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவைகளைப் பொறுத்தவரையில் அரசுத்தலைவர் டிரம்ப் அவர்கள் எடுத்திருக்கும் முடிவுகள் ஒழுக்கரீதி கோட்பாடுகளுக்கு எதிராக இருக்கின்றன என்றார் பேராயர்.
எந்த ஒரு கட்சிக்கும் சார்பாக இல்லாத திருஅவை, தன் படிப்பினைகளில் எப்போதும் உறுதியாக உள்ளது என்பதையும் எடுத்துரைத்த பேராயர் Broglio அவர்கள், ஒரு சிலரின் மனித மாண்பை மட்டும் குறித்து அக்கறைக் கொள்ளாமல் அனைத்து மக்களின் மனித மாண்பை அரசுத்தலைவர் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார்.
இறைவனிடமிருந்து அபரிவிதமான கொடைகளைப் பெற்றுள்ள அமெரிக்க ஐக்கிய நாடு, அவைகளை ஏழைகள், அகதிகள், முதியோர் மற்றும் நோயாளிகளுடன் பகிர முன்வரவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Broglio.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்