சிரியாவில் 75 இலட்சம் குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
சிரியா நாட்டில் 75 இலட்சம் குழந்தைகள் உட்பட 1 கோடியே 67 இலட்சம் பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக ஐ.நா.வின் UNICEF அமைப்பு அறிவித்துள்ளது.
72 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடிபெயர்ந்தவர்களாக வாழ்வதாகவும், தொடர்ந்து இடம்பெற்றுவரும் பொருளாதார நெருக்கடியால் 85 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அவசர கால நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியாவிலுள்ள 40 விழுக்காட்டு மருத்துவமனைகளும் நல ஆதரவு அமைப்புகளும் முற்றிலுமாகவோ அல்லது பகுதி அளவிலோ செயல்படுவதில்லை எனக்கூறும் யுனிசெப் அமைப்பு, 1 கோடியே 36 இலட்சம் மக்களுக்கு சுத்தக் குடிநீர், சுகாதார வசதிகள் தேவைப்படுகின்றன எனவும் தெரிவிக்கிறது.
ஏற்கனவே 24 இலட்சம் குழந்தைகள் பள்ளிகளைவிட்டு படிப்பை நிறுத்தி வெளியேறியுள்ளதாகவும், இன்னும் 10 இலட்சம் பேர் தங்கள் படிப்பை பாதியில் விடும் ஆபத்து இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 13 ஆண்டுகளில் ஐ.நா.வின் புள்ளிவிவரங்களின்படி, சிரியாவில் ஏறக்குறைய 25,500 உரிமை மீறல் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன, அதில் குழந்தைகளை ஆயுதம் தாங்கியப் பணிக்குத் தேர்ந்தது, அவர்களை உடல் ஊனமாக்கியது மற்றும் கொன்றதும் அடங்கும்.
இதற்கிடையே, சிரியாவில் இடம்பெற்றுவரும் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு மத்தியில் கத்தோலிக்கத் திருஅவை மற்றும் திருத்தந்தையின் ஒன்றிப்பையும் அன்பையும் வெளிப்படுத்துவதன் நோக்கமாகவும், சிரியா நாட்டின் கத்தோலிக்கச் சமூகத்திற்கு ஆதரவை வழங்குவதற்காகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரதிநிதியாக, கீழைவழிபாட்டுத் திருஅவைகளுக்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் Claudio Gugerotti அவர்கள், ஜனவரி 24 முதல் 29 வரை சிரியாவில் பயணம் மேற்கொள்கிறார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்