நேர்காணல் – தூதன் கத்தோலிக்க மாத இதழின் எதிர்நோக்கின் திருப்பயணம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருஅவையின் மறைவல்லுனர்களுள் ஒருவராகிய புனித பிரான்சிஸ் தே சேல்ஸ் அவர்கள் உயிரிழந்த 400 ஆண்டுகளுக்குப்பின் திருத்தந்தை 11ஆம் பயஸ் அவர்களால் கத்தோலிக்கப் பத்திரிகையாளர்களின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டார். 1567ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி Savoy யின் சேல்ஸ் அரண்மனையில் பிறந்து, லியோனில் 1622ஆம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி இறைபதம் சேர்ந்தவர் பிரெஞ்சு புனிதரான பிரான்சிஸ் தே சேல்ஸ். தன் வாழ்வின் எல்லாச் சூழல்களிலும் மாபெரும் அன்பை எங்கே காணலாம் என்று தன்னையே கேட்டுக்கொண்டவர். புனித பிரான்சிஸ் சலேசியார் காலத்தின் அடையாளங்களை மிகத்துல்லியமாக கணித்தவர். செய்தியாளர்கள் மற்றும், சமூகத் தொடர்பாளர்களின் பாதுகாவலரும், "நாடுகடத்தப்பட்டிருந்த" ஜெனீவா ஆயருமான புனித பிரான்சிஸ் தே சேல்ஸ் அவர்கள் மிகப்பெரும் சவால்கள் நிறைந்த காலக்கட்டத்தில், பிறரன்பு, மகிழ்வு, மற்றும், சுதந்திரம் ஆகியவற்றில் கடவுளைத் தேடுவதில் மக்களுக்கு உதவியவர். அவரைப் பாதுகாவலராகக் கொண்டு இயங்கிவரும் கத்தோலிக்க பத்திரிக்கையாளர்கள் பலர். அவர்களுள் ஒருவராக சிறப்புடன் பத்திரிக்கைப் பணியினை ஆற்றி வருபவர் அருள்பணி வின்சென்ட் இருதயராஜ். தமிழகத்தின் தூதன் கத்தோலிக்க மாத இதழின் எதிர்நோக்கின் திருப்பயணம் பற்றிய கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்ள இருக்கின்றார்.
கோயம்புத்தூர் மறைமாவட்டத்தைச் சார்ந்தவரான அருள்பணி வின்சென்ட் அவர்கள், இயேசு சபையின் மதுரை மறைமாநில அருள்பணியாளர். நாட்டார் வழக்காற்றியல் மற்றும் தொடர்பியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ள தந்தை அவர்கள், தற்போது பழங்குடி மக்களின் இனவரைவியல் தொடர்பான முனைவர்பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகின்றார். நாட்டுப்புற கலைகள், பண்பாடுப் படைப்புகளை ஆவணப்படுத்துதல் மற்றும் பரவாலாக்கம் செய்தல், கட்டுரைகள் எழுதுதல், படைப்பாக்கம் செய்தல், படைப்புகளைத் தொகுப்பாக்கம் செய்தல் போன்ற பணிகளில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். சேசுநாதருடைய திருஇருதயத் தூதன் இதழின் ஆசிரியர், தமிழக இயேசு சபையினரின் பாதைகள் இதழின் ஆசிரியர், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தின் துணை இயக்குநர் என பல பொறுப்புக்களைத் திறம்பட ஆற்றியவர். தந்தை அவர்களை தூதன் இதழின் எதிர்நோக்கின் திருப்பயணம் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
1. தூதன் கத்தோலிக்க மாத இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு காரணம் பற்றியும் இவ்விதழ் வழியாக கிறிஸ்தவ மக்களுக்கு ஆற்றிவரும் பணிகள் என்ன?
அன்பிற்கினிய வத்திக்கான் நேயர்களே, சிறப்புமிக்க யூபிலி ஆண்டில் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக அடி எடுத்து வைத்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் இனிய வணக்கத்துடன் கூடிய நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அச்சு ஊடகம் என்பது கத்தோலிக்கத்தையும் திருஅவையையும் மனித மதிப்பீடுகளையும் பரவலாக்கம் செய்வதற்கான முக்கிய கருவி என்று திருஅவைத் தந்தையர்கள் எடுத்துரைத்துள்ளனர். அவ்வழியில் தூதன் இதழும் கடந்த136 வருடங்களாக தமிழகம் மற்றும் தமிழகம் கடந்து வாழும் மக்களில் இறைமதிப்பீடுகளை பலவித முன்னெடுப்புகள் வழியாக விதைத்து வருகின்றது.
தூதன் இதழின் துவக்கம் செப அப்போஸ்தல சபையின் வரலாற்றில் இருந்து துவங்குகிறது. 1844இல் இயேசுசபை குரு கோத்ரேலவால் துவங்கப்பட்டதுதான் செப அப்போஸ்தல சபை. அதன் முக்கிய நோக்கம் செபங்களையும் நற்செயல்பாடுகளையும் இயேசுவின் திருஇருதயத்துக்கு ஒப்புக் கொடுப்பதாகும். இதன் அடிப்படையில் இயேசுவின் திருஇதய அன்பின் மதிப்பீடுகளைக் குடும்பங்களில், இளையோர்களில், மாணாக்கர்கள் மற்றும் சிறுவர் சிறுமியர்களில், துறவிகளில் மற்றும் நலம் விரும்பிகளின் இதயத்தில் கொண்டு சேர்த்தலை நோக்கமாகக் கொண்டு 1888 ஆம் ஆண்டு தமிழக இயேசு சபையினரால் துவங்கப்பட்டதுதான் சேசுநாதருடைய திருஇருதய தூதன் என்ற மாத இதழ்.
கல்லச்சில் பதிப்பிக்கப்பட்ட தூதன் 4 பக்க இதழாகத் துவங்கப்பட்டு, பின்பு வளர்ச்சியடைந்து 16 பக்கங்களைக் கொண்ட இதழாக வெளிவந்தது. பின்பு 32 பக்கங்களாக்கப்பட்டு 1914இல் 40 பக்கங்களைக் கொண்டதாக மாறியது. இன்று 50 பக்கங்களைக் கொண்ட இதழாக கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து படைக்கின்றது. ஆன்மிகம், செபம், புனிதர்கள் வரலாறு, திருஅவை செய்திகள், திருத்தந்தையின் கருத்துகள், பண்பாட்டு அசைவுகள், சமூக மதிப்பீடு, இயற்கை பாதுகாப்பு, போன்றவற்றை உள்ளடக்கிய கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், சிறப்பு நேர்காணல்கள், நாட்டுநடப்பு பற்றிய அலசல்கள், கதைகள், சிரிப்பு வெடிகள், சிந்தனைத் தூறல்கள், மருத்துவக் குறிப்புகள் எனப் பல்வேறு கோணங்களில்; இயேசுவின் திரு திருஇதய அன்பின் மதிப்பீடுகளை மக்களில், திருஅவையில், சமூகத்தில் செயல்படுத்திட மற்றும் செயலாக்கம் பெறச் செய்திட தூதன் இதழ் தொடர்ந்து உழைக்கின்றது. அதுமட்டுமல்ல நாட்டிற்கும் வீட்டிற்கும் சுற்றுச்சூழலுக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் பயனுடையவர்களாய் மற்றும் வளப்படுத்துபவர்களாய் வாழ இவ்விதழ் செயலூக்கியாய்ச் செயல்படுகின்றது என்று சொன்னால் மிகையில்லை.
சேசுநாதருடைய திருஇருதயத் தூதன் என்ற இவ்விதழின் பெயரை மக்கள் சுருக்கி தூதன் என்று அழைக்கின்றனர். பெயர் சுருக்கம் பெற்றாலும் வாசகர் வட்டம் பெருகி காலத்தின் வளர்ச்சிக்கேற்ற வகையில் தரம் வண்ணம் கொண்டு மக்கள் கைகளில் இனிதே தவழ்கிறது.
2. எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற இந்த யூபிலி ஆண்டின் மையக்கருத்தினை முன்னிறுத்தி இந்த பத்திரிக்கைத் துறையில் தாங்கள் செய்து வரும் செயல்கள் என்ன?
எதிர்நோக்கு என்பது, வருங்காலம் குறித்த நேர்மறைக் கருத்து மட்டுமல்ல, அது நன்மைத்தனத்திற்கான மனிதரின் அர்ப்பணத்தால் ஊட்டம்பெறும் வாழ்க்கை முறை என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறுகிறார். அவ்வகையில் யூபிலி ஆண்டிற்கான இலட்சிணை உலகின் நான்கு திசைகளில் உள்ள மக்கள் ஒவரோடு ஒருவர் உறவு கொண்டு உறுதியற்ற வலுவற்ற அலைகளின் நடுவில் சிலுவை என்ற நங்கூரம் வழியாக எதிர்நோக்கில் நிலைத்து நிற்க அழைக்கிறது. அந்த வகையில் இந்தப் பத்திரிக்கைத் துறைப் பணியில் நாங்கள் செய்து வருவதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
செப்டம்பர் மாதத்தில் அன்னை மரியாவின் பிறப்பு விழாவைச் சிறப்பிப்பதால் அன்னையின் படத்தை இதழின் முகப்புப் பக்ககத்தில் பதிக்க எண்ணிணோம். அனைவருக்கும் அருள் வழங்கும் அருள் நிறைந்தவராக இருக்கும் அன்னையினைச் சித்தரிக்கும் வகையில் புன்னகை பூத்த முகத்துடன் அன்னனையின் படத்தை முகப்பு படமாக வைத்து இதழை வெளியிட்டிருந்தோம். அடுத்த மாதம் வாசகர் ஒருவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். “நான் எனது வீட்டில் தனித்து வாழ்கிறேன். எனது பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து ஆளாக்கியுள்ளேன். அவர்கள் அனவரும் நல்;ல நிலையில் அவர்களது மனைவி மக்களுடன் உள்ளனர். அவர்கள் என்னைக் கவணித்துக் கொள்வதற்கான நேரமும் இல்லை, நான் அதனை அவர்களிடம் எதிர்பார்க்கவும் இல்லை. எனவே நான் அவர்களுக்குப் பாரமாக இல்லாதவாறு எனது கணவரின் இறப்பிற்குப் பிறகு எனது வீட்டிலேயே வாழத் தொடங்கினேன். இருப்பினும் ஒருவிதமான தனிமை, மனச் சோர்வு எனக்குள் வந்து கொண்டே இருந்தது. நான் தூதன் இதழை தவறாது வாசிப்பேன். இந்த முறை நீங்கள் வெளியிட்டிருந்த அன்னையின் புன்னகை பூத்த முகம் எனக்காகவே வெளியிட்டுள்ளதாக எண்ணுகிறேன். அந்தப் புன்னகை பூத்த அன்னையின் முகத்தை பார்க்கும் போது எனக்குள் உற்சாகம் பிறந்தது. நம்பிக்கை பிறந்தது. சோர்ந்து கவலை தோய்ந்த முகத்துடன் இருந்த நான் இப்போது அன்னை என்னோடு இருக்கிறார் என்ற எண்ணத்தில் அவர்களைப் பார்த்து நானும் புன்னைகைக்கிறேன். எனது தனிமையை தவிடுபொடியாக்கிப் புன்னகையை வரவழைத்த உங்களது படைப்பிற்கு நன்றி” என எழுதியிருந்தார்.
மற்றொரு வாசகர் “நான் அன்னையை பற்றிய தவறான புரிதல் கொண்டிருந்தேன். நமது கத்தோலிக்கத் திருஅவை அன்னையை எப்படிப் பார்க்கிறது, எப்படி அவரை வணங்கக் கற்றுத் தருகிறது என்பதையும், குழப்பவாதிகளின் கேள்விகளுக்கான பதில்களையும் தந்து அன்னையின் வணக்கத்தைக் குறித்த சரியான புரிதலை தந்தமைக்குப் பாராட்டுகள் என எழுதியிருந்தார். ஆம் இந்தப் பத்திரிகைப் பணி அல்லது இதழ் பணி என்பது உறுதியற்ற வலுவற்ற சூழலில் வாழும் சகோதர சகோதரிகளை வலுப்படுத்தி, நம்பிக்கையுடன் வாழ வழிகாட்டும் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக வாழ உதவி புரிகின்றது. வாசகர்கள் பலர் பல சூழல்களில் பல்வேறு அலைக் கழிப்புகளுக்கு நடுவில் வாழ்கின்றனர். அவர்கள் இதழில் இடம் பெறும் பல்வேறு செய்திகளையும் கட்டுரைகளையும் வாசிக்கும்போது புது உற்காகமும் தெம்பும் அவர்களை எதிர்நோக்கில் நிலைத்து நிற்கச் செய்கிறது. பொதுநலனுக்கென தன் அனைத்து வளங்களையும் வழங்கி நம்பிக்கைக்கு ஊட்டடுவதே எதிர்நோக்கின் சிறப்பம்சம் என கூறியுள்ள திருத்தந்தையின் வழியொற்றி பத்திரிகைத் துறையானது யார் என்று தெரியாத பலருக்கும் ஊக்கத்தை கொடுக்கும் நங்கூரமாகச் செயல்படுகின்றது.
இதற்கு உதாரணம் ஒருமுறை அலைபேசியில் ஒருநபர் என்னைத் தொடர்புகொண்டு நான் தூதன் இதழை ஒரு பங்குத் தந்தையின் இல்லத்தில் பார்த்தேன். பாதர் இதை நான் எடுத்துக் கொள்ளலாமா என்று அவரிடம் கேட்டுவிட்டு எதார்த்தமாக முகப்புரையை வாசித்தேன். இயற்கையைக் காக்க தாங்கள் விடுத்துள்ள அழைப்பும், செயல்பாடுகளுக்கான வழிமுறைகளும், நாட்டு நடப்பினை அலசி உண்மையை கண்டறிய விடுக்கும் சிந்;தனைகளும் என்னைக் கவர்ந்தன. அடடா! இந்த விளக்கத்தைத் தேடித்தானே நாம் அலைந்தோம். சரியான நேரத்தில் கிடைத்திருக்கிறதே என்று மகிழ்ந்தேன். நான் கத்தோலிக்கர் அல்ல மாறாக பிறசபையினைச் சார்ந்தவன். தூதன் இதழில் வெளிவந்த கருத்துகள் நான் செய்யவிரும்பும் பணியான இயற்கை பாதுகாப்பு மற்றும் உண்மையின் வழிநிற்றல் என்பதற்கு உரமிடுவதாக அமைந்துள்ளது. எனவே தங்களது அலைபேசி எண் இருந்ததால் அதனைத் தெரிவிக்க எண்ணினேன், நன்றி என்று பகிர்ந்துகொண்டார்.
இவ்வாறு எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் தேடும் தேடல்களுக்கு விடைகளையும் வழிகாட்டுதல்களையும் பத்தரிகை செய்கிறது என்பதை நாம் அறிந்து கொண்டோம். எனவேதான் எமது இதழில் மாதம் இரு சிறப்பு நாட்கள் குறித்த தகவல்கள் அதன் சிறப்பம்சங்கள், மாணாக்கருக்கான வழிகாட்டல், குழந்தைகளுக்கான வழிகாட்டல், இளையோருக்கான வழிகாட்டல், பெற்றோருக்கான வழிகாட்டல், சிறுகதைகள், தொடர்கதைகள,; கவிதை பக்கம், மாதம் ஓர் தலைப்பில் படைப்பாக்கம், வினாடிவினா பக்கம், நூல்கள் அறிமுகம் என கூட்டொருங்கியக்க அடிப்படையில் துறவிகள் பொதுநிலையினர் இளையோர் மாணாக்கர் என அனைவரும் பங்கேற்கும்; வகையில் அவர்களது படைப்புகளை வெளியிட்டு எதிர்நோக்கின் திருப்பயணிகளாக இணைந்து பயணிக்க தொடர்ந்து உழைக்கிறோம்.
3. யூபிலி ஆண்டின் எதிர்நோக்கின் அனுபவம் எப்படிப்பட்டதாக இருக்கின்றது எந்தவிதமான மாற்றங்களை மக்களிடத்தில் பத்திரிக்கைத் துறையின் வழியாக ஆற்றலாம்?
யூபிலி ஆண்டின் எதிர்நோக்கின் அனுபவம் பலவித மாற்றங்களை நம்மிலும் மக்களிடத்திலும் கொண்டு சேர்க்க பத்திரிகைத் துறை வழியாகச் சிறந்த பங்காற்ற முடியும். எப்படியெனில் மக்களின் வாழ்க்கை அனுபவங்களோடு எப்படிப்பட்ட தேவை அவர்களுக்கு இருக்கின்றது என்பதை மையமாகக் கொண்டு இதழின் படைப்புகளை அமைத்திடும்போது அது அவர்களது வாழ்விற்கு அச்சானியாக அமைந்து தளராத எதிர்நோக்கு கொண்ட மனநிலையைத் தருகின்றது. எடுத்துக்காட்டாக இதழில் வெளிவரும் சிறுகதை மற்றும் தொடர்கதைகள் மக்களின் அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளின் அடியொற்றி எழுதப்படும்போது அது வாசகர்களுக்கு பயன்கொடுப்பதோடு இயேசுவின் இறையாட்சி மதிப்பீடுகளைக் கொண்டு சேர்க்கும் சக்தியாகவும் விளங்குகிறது. இது எங்களது அனுபவமாகவும் இருக்கின்றது. குறிப்பாக இறையாண்மை, சமத்துவம், சனநாயகம் போன்றவற்றிற்கு எதிரான அச்சுறுத்தல்கள் நிலவும் இக்காலத்தில் அன்பினால் கட்டியெழுப்பப்படும் மானுடத்தையும் அதற்காக உழைக்கும் எண்ணற்ற நல் உள்ளங்களையும் சுட்டிக்காட்டி மக்களின் மனதில் அச்சத்தை தவிர்த்து மனஉறுதியை வளர்த்து சகோதரத்துவத்தில் இணைந்து பயணிக்கும் வகையில் படைப்புகளை அளித்திடும்போது அது மாற்றத்திற்கான திறவுகோலாக அமைகிறது.
பரிவினைகள், கலவரங்கள், சர்வாதிகாரம், சுயநலப் போக்குகள், போர்கள், கடினமான பொருளாதாரச் சூழல்கள், பெருமுதலாளிகள் சார்ந்த அரசியல் சூழல்கள், பொய்களை உண்மையென நம்பவைக்கும் சதிவேலைகள் போன்றவற்றைத் தோலுரித்துக் காட்டி எது உண்மை என்பதையும் எது உகந்தது என்பதையும் எடுத்துரைக்கும் படைப்புகளைத் தந்து தெளிந்த மனநிலைக்கு மக்களைக் கொண்டு செல்கின்றபோது அங்கே ஒருங்கிணைந்த கூட்டியக்கத் திருஅவையாக சமூகமாக மக்களைப் பயணிக்க வைக்க பத்திரிகைத் துறை உதவுகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக தந்தையின் அன்பை மக்களுக்கு அளிக்கும் தொடர்பாளராக மனுஉருவாகிய இயேசுவின் வழியில் நம்மிடையே வாழும் முதியவர்களை, அடிப்படைவசதியின்றி தவிக்கும் எளியோரை, ஆதரவின்றித் தவிக்கும் அன்பர்களை நோக்கி மனங்களைத் திருப்பி இவர்களுக்கான தேவைகளில் உதவிடும் வழிமுறைகளை இறைவார்த்தைப் பகிர்வு, புனிதர்கள் வாழ்வு மற்றும் பல்வேறு நிகழ்வுகளின் வழியாக வழங்கிடும்போது இறையரசை இம்மண்ணில் என்பதை எடுத்தியம்பிடும் தொடர்புக் கருவியாக பத்திரிகை செயல்படுகின்றது. இவ்வாறு பல்வேறு படைப்புகளை மக்களின் மனநிலையை அறிந்து இன்றைய எதார்த்த சூழல்களை கருத்தில் கொண்டு எதிர்நோக்கு என்னும் திரியை அணையாமல் காத்திட அழைக்கும் திருத்தந்தையின் அழைப்பிற்கு பத்திரிகைத் துறை உரமூட்டுகிறது என்பதில் ஐயம் இல்லை.
'நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்" (திப 4:32) என்ற இறைவார்த்தைக் கேற்ப ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் பல ஊர்களில் இருக்கும் அனைவரையும் ஒருங்கிணைத்து செயலாற்றும் ஆற்றல்; கொண்ட பத்திரிகைத் துறை வாயிலாக யூபிலி ஆண்டில் எதிர்நோக்கின் திருப்பயணிகளாய்த் திகழ இதழ்களை வாசிப்போம் பொதுநன்மைக்கு உரமூட்டுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்