தேடுதல்

கானா ஆயர்கள் கானா ஆயர்கள் 

குடும்ப மதிப்பீடுகளின் சட்டப் பரிந்துரைக்கு கானா ஆயர்கள் ஆதரவு

கல்விப்பணியிலும், நலஆதரவுப் பணியிலும், இளையோரின் ஒழுக்க ரீதி வளர்ச்சிப் பணியிலும் கத்தோலிக்க திருஅவையின் சேவைகளைப் பாராட்டியுள்ளார் கானா அரசுத்தலைவர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஏற்கனவே கானா நாட்டு பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட குடும்ப மதிப்பீடுகளை உள்ளடக்கிய சட்டப்பரிந்துரைக்கு புதிய அரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கவேண்டும் என தலத்திருஅவை அதிகாரிகள் விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதியே பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டப் பரிந்துரைக்கு அப்போதைய அரசுத்தலைவர் Nana Akufo-Addo ஒப்புதல் வழங்கமுடியாத நிலையில், தற்போது பாராளுமன்றமும் நிறைவுற்றுள்ள நிலையில், அந்த சட்டப் பரிந்துரையின் ஆயுள்காலமும் முடிந்துள்ளது என புதிய அரசுத்தலைவர் Mahama அறிவித்துள்ளார்.

கானா நாட்டு தலத்திருஅவை அதிகாரிகளின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட புதிய அரசுத்தலைவர், இந்த சட்டப் பரிந்துரை மீண்டும் விவாதிக்கப்பட்டு பாராளுமன்றத்தால் ஒருமனதாக நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.

ஒழுக்கநெறிகளை கல்வி நிலையங்களில் கற்பித்துக் கொடுத்தால், குடும்ப மதிப்பீடுகளுக்கென்று ஒரு தனிச் சட்டம் தேவைப்படாது எனவும் எடுத்துரைத்த, இம்மாதம் 7ஆம் தேதியே பதவியேற்ற அரசுத் தலைவர் Mahama, கல்விப்பணியிலும், நலஆதரவுப் பணியிலும், இளையோரின் ஒழுக்க ரீதி வளர்ச்சிப் பணியிலும் கத்தோலிக்க திருஅவையின் அரும்பெரும் சேவைகளைப் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 ஜனவரி 2025, 15:56