தடம் தந்த தகைமை - யூதாவின் அரசனான மனாசே
மெரினா ராஜ் - வத்திக்கான்
எசேக்கியாவின் பிற செயல்களும், அவரது பேராற்றலும், அவர் குளமொன்று வெட்டிக் கால்வாய் அமைத்துத் தண்ணீரை நகருக்குள் கொண்டு வந்ததும், ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப் பட்டுள்ளன. எசேக்கியா தம் மூதாதையருடன் துயில் கொண்ட பின், அவருக்குப் பதிலாக அவர் மகன் மனாசே அரசன் ஆனான். மனாசே அரசனானபோது அவனுக்கு வயது பன்னிரண்டு. அவன் ஐம்பத்தைந்து ஆண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தான். எப்சிபா என்பவரே அவன் தாய். இஸ்ரயேலர் முன்னிருந்து ஆண்டவர் விரட்டிய வேற்றினத்தாரின் அருவருப்புகளை அவன் பின்பற்றி ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.
அவன் அவனுடைய தந்தை எசேக்கியா தகர்த்தெறிந்த தொழுகை மேடுகளை மீண்டும் கட்டியெழுப்பினான்; பாகாலுக்குப் பலிபீடங்களைக் கட்டினான்; இஸ்ரயேல் அரசன் ஆகாசு செய்தது போல், அசேராக் கம்பங்களை நிறுவினான்; வானத்துப் படைகளையெல்லாம் வணங்கி வழிபட்டான். ‘எருசலேமில் என் பெயர் விளங்கச் செய்வேன்’ என்று ஆண்டவர் கூறியிருந்த அவரது கோவிலில் அவன் பலிபீடங்களை நிறுவினான். ஆண்டவரின் இல்லத்தின் இரு முற்றங்களிலும் வானத்துப் படைகளுக்கெல்லாம் அவன் பலிபீடங்களைக் கட்டினான். மேலும், அவன் தன் மகனை நெருப்பில் பலியாக்கினான்; குறி கேட்பதிலும் சகுனம் பார்ப்பதிலும் நம்பிக்கை கொண்டு குறி கூறுபவர்களோடும், சகுனம் பார்ப்பவர்களோடும் தொடர்பு கொண்டு ஆண்டவர் திருமுன் தீயன புரிந்து ஆண்டவருக்குச் சினமூட்டினான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்