தேடுதல்

Laudato si’ திருமடல், ஆன்மீகத்தை விழித்தெழச் செய்கின்றது

ஒரே குடும்பமாக இருப்பது என்பது, குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினர் மீதும் அக்கறையாய் இருப்பதன் பொறுப்பை உணர்வதாகும் - அருள்சகோதரி Jyotisha

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய “இறைவா உமக்கே புகழ்” எனப்படும் Laudato si’ திருமடல், உலகப் போக்கால் இழுத்துச் செல்லப்படும் இவ்வுலகை நெறிப்படுத்தும் ஆன்மீகக் கருவியாக உள்ளது என்று, இந்திய அருள்சகோதரி ஒருவர் கூறியுள்ளார்.

உலகளாவிய கத்தோலிக்க காலநிலை இயக்கத்தில் (GCCM) ஓர் உறுப்பினராக, பீகார் மாநிலத்தில் பணியாற்றிவரும், நோத்ரு தாம் சபையின் அருள்சகோதரி Mary Jyotisha Kannamkal அவர்கள், தனது பணி பற்றி வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், இவ்வாறு கூறியுள்ளார்.

இறைவா உமக்கே புகழ் திருமடல், நவீன உலகு, ஆன்மீக விழுமியங்கள் பாதையில் செல்லவும், பொதுநலனுக்காக ஒத்துழைப்பு வழங்கும் வழிகளைத் தேடவும் உதவுகின்றது என்றுரைத்துள்ள அருள்சகோதரி Jyotisha அவர்கள், மனித மற்றும், சுற்றுச்சூழல் நெருக்கடி, ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு காலம் கனிந்துள்ளது என்று கூறியுள்ளார்.

கடவுள் படைத்துள்ள அனைத்தோடும், அனைத்து மனிதரோடும் உடன்பிறந்த உறவில் வளர திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார் என்றும், "வாசுதேவ குடும்பகம்" என்ற இந்திய ஆன்மீகம், "உலகம் முழுவதுமே ஒரே குடும்பம்" என்ற கருத்தைச் சுட்டிக்காட்டுகிறது என்றும், ஒரே குடும்பமாக இருப்பது என்பது, குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினர் மீதும் அக்கறையாய் இருப்பதன் பொறுப்பை உணர்வதாகும் என்றும், அருள்சகோதரி Jyotisha அவர்கள் கூறியுள்ளார்.

நோத்ரு தாம் சபை அருள்சகோதரிகள்
நோத்ரு தாம் சபை அருள்சகோதரிகள்

நம் பொதுவான இல்லமாகிய பூமிக்கோளத்தைப் பராமரித்தல் பற்றி, 2015ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட, இறைவா உமக்கே புகழ் திருமடல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவேண்டும் என்ற ஆவலை, தன்னில் அதிகமாகத் தூண்டியது என்றும், இப்பூமி மற்றும், ஏழைகளின் அழுகுரல் தன்னை மிகவும் பாதித்தது என்றும், அச்சகோதரி கூறியுள்ளார்.

பாட்னாவை மையமாகக் கொண்டு பணியாற்றிவரும் அருள்சகோதரி Jyotisha அவர்கள், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து, பயிற்சிப் பாசறைகள் மற்றும், பல்சமயக் கூட்டங்களை நடத்திவருகிறார். ஒருங்கிணைந்த சூழலியலை ஊக்குவித்து வருகின்ற இவர், இப்போதைய கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள வறியோர்மீது அதிக கவனம் செலுத்தி பணியாற்றிவருகிறார்.

ஏறத்தாழ 12 கோடியே 50 இலட்சம் மக்கள் வாழ்கின்ற பீகார் மாநிலத்தில், 3 கோடியே 60 இலட்சம் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர் என்று, உலக வங்கி கணித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 ஏப்ரல் 2021, 15:28